ஜப்பான் நாட்டில் மோட்டார் பைக் அளவுகொண்ட புளுஃபின் டூனா (BLUEFIN TUNA) வகை மீன், 11 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளது. இது பற்றிய ஒரு செய்தித் தொகுப்பை தற்போது காணலாம்…
உலகின் பல்வேறு பகுதிகளில் நடக்கும் பல சுவாரஸ்யமான சம்பவங்கள், அனுதினமும் நம்மை ஆச்சரியப்பட வைத்துக்கொண்டே இருக்கின்றன. அப்படியொரு ஆச்சரியமூட்டும் சம்பவமே ஜப்பான் நாட்டின் டோக்கியோ நகரில் நடந்துள்ளது.
டோக்கியோ நகரில் 1999-ம் ஆண்டு தொடங்கப்பட்ட டொயோசு மீன் சந்தையில், ஒவ்வொரு ஆண்டும் கடற்பகுதியில் பிடிக்கப்படும் பெரிய மீன்களுக்கான ஏலம் நடைபெறும். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான ஏலம் கடந்த ஜனவரி 5-ம் தேதி நடைபெற்றது. அந்த ஏலத்தின்போது தோராயமாக ஒரு மோட்டார் பைக்கின் அளவில் இருக்கும், 276 கிலோ எடைகொண்ட புளுஃபின் டூனா வகை மீன் ஏலம் விடப்பட்டது.
மீனை ஏலத்தில் எடுக்க கடும் போட்டி நிலவிய நிலையில், பிரபல மிஷெலின் ஸ்டார் ரெஸ்டாரண்ட் நிறுவனமான ஒனோடெரா குழுமம், புளுஃபின் டூனா மீனை 207 மில்லியன் யென் கொடுத்து ஏலம் எடுத்தது. இந்த தொகை அமெரிக்க டாலர் மதிப்பில் 1.3 மில்லியனாகவும், இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 11.26 கோடியாகவும் உள்ளது.
அதனடிப்படையில் டொயோசு மீன் சந்தை தொடங்கப்பட்ட காலத்தில் இருந்து நடந்த மீன் ஏலத்தில், இது இரண்டாவது அதிகபட்ச ஏலத் தொகையாக பார்க்கப்படுகிறது. ஏற்கனவே சன்மாய் நேஷ்னல் என்ற பிரபல சுஷி ரெஸ்டாரண்ட்களை நடத்தி வரும் கியோஷி கிமுரா என்பவர், கடந்த 2019-ம் ஆண்டு 333.6 மில்லியன் யென் கொடுத்து 278 கிலோ எடைகொண்ட புளுஃபின் டூனா வகை மீனை வாங்கியிருந்தார். இது, இந்திய ரூபாய் மதிப்பில் 18.13 கோடியாகும்.