உலகில் அனைத்து துறைகளிலும் இந்தியா முதல் மூன்று இடங்களில் உள்ளது என ஆளுநர் ஆர்.என்.ரவி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் உள்ள பாரதியார் மண்டபத்தில், “போஷன் உத்சவ்” எனும் புத்தகத்தை ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்டு, மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார்.
அப்போது, உணவு நமது கலாச்சாரத்தோடு தொடர்புடையது என்பதால், நாம் அனைவரும் நமது வீடுகளில் உணவு உற்பத்தி செய்யும் செடிகளை நடவேண்டும் என தெரிவித்தார்.
மேலும், குழந்தையின் வளர்ச்சிக்கு தாய்ப்பால் தான் சிறந்தது, ஆனால் சிலர் அதை மறந்துவிட்டு செயற்கை உணவு முறையை கொடுக்கத் தொடங்கிவிட்டார்கள் என வேதனை தெரிவித்தார்.
அத்துடன், கோவிட் காலகட்டத்தில் நாம் நமக்கான தடுப்பூசியை நமது மக்களுக்கு மட்டும் பயன்படுத்தாமல் உலகிற்கே வழங்கினோம் எனவும், இந்த கருணை மற்றும் ஞானம் நமது டி.என்.ஏவில் உள்ளது எனவும் குறிப்பிட்டார். இந்நிகழ்ச்சியில், ஏராளமான கல்லூரி மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.