மும்பையில் பிரபல பாலிவுட் நடிகர் சயீப் அலிகான் மீது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் நடத்திய தாக்குதல் சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் சயீப் அலிகான் குறித்தும், அவர் மீதான தாக்குதலுக்கான காரணம் குறித்தும் இந்த செய்தி தொகுப்பில் சற்று விரிவாக பார்க்கலாம்.
மும்பை பாந்த்ரா குடியிருப்பில் வசித்து வந்த பாலிவுட் நடிகர் சயீப் அலிகான் இல்லத்திற்குள் வியாழக்கிழமை அதிகாலை 2.30 மணிக்கு புகுந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர், வீட்டில் இருந்த பணிப்பெண்ணுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
சத்தம் கேட்டு அதனை தடுக்க முயன்ற சயீப் அலிகானை அந்த அடையாளம் தெரியாத நபர் கத்தியால் கண்மூடித்தனமாக தாக்கிவிட்டு தப்பியோடியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, இல்லத்தில் இருந்த காரை இயக்குவதற்கு ஓட்டுநர் இல்லாத காரணத்தினால் ரத்த வெள்ளத்தில் துடித்த சயீப் அலிகானை அவரது மகன் இர்பான், ஆட்டோ மூலமாகவே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
சயீப் அலிகான் மீது 6 இடங்களில் கத்திக்குத்து நடந்திருப்பதாகவும், அதில் இரண்டு ஆழமானவை எனவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. சயீப் அலிகான் முதுகுத் தண்டில் இருந்த இரண்டரை இன்ச் கத்தி அறுவைச் சிகிச்சையின் மூலம் அகற்றப்பட்டுள்ளது. மேலும் கை மற்றும் கழுத்துப் பகுதியில் ஆழமான காயங்கள் ஏற்பட்டுள்ள இடங்களில் சுமார் பத்து மணி நேரத்திற்கும் மேலாக நரம்பியல் மற்றும் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நடைபெற்று முடிந்த நிலையில் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு சயீப் அலிகான் மாற்றப்பட்டுள்ளார்.
ஓரிரு தினங்களுக்கு அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்க வேண்டும் எனவும், அவர் உயிருக்கு எந்தவித ஆபத்தும் இல்லை எனவும் மருத்துவமனை நிர்வாகம் விளக்கமளித்துள்ளது.
மும்பையில் பிரபல நடிகர் ஒருவரின் இல்லத்திற்குள் நுழைந்து நடத்தப்பட்டுள்ள இந்த தாக்குதல் சம்பவம் நாடு முழுவதும் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சயிப் அலிகானை தாக்கிய நபரை கண்டுபிடிக்க 10 தனிப்படைகள் அமைத்து தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையே, சயிப் அலிகான் இல்லத்தில் நடைபெற்றது கொள்ளை முயற்சி எனவும், தனது மனைவி மற்றும் குழந்தைகளை பாதுகாக்க முயன்ற போதே சயீப் அலிகான் தாக்கப்பட்டிருப்பதாகவும் காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக விரிவான விசாரணை நடைபெற்று வருவதாகவும் சயிப் அலிகான் இல்லத்திற்குள் நுழைந்த நபர் விரைவில் கைது செய்யப்படுவார் எனவும் காவல்துறை உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் சயீப் அலிகான், விரைவில் குணமடைய வேண்டும் என பாலிவுட் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் தங்களின் பிரார்த்தனைகளை தெரிவித்து வருகின்றனர். அதே நேரத்தில் அவரது ரசிகர்கள் வீடு முன்பாகவும் நகரத்தின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக தகவலின் அடிப்படையில் சயீப் அலிகான் தரப்பிடம் இருந்து ஒரு வேண்டுகோள் விடுக்கப்பட்டிருக்கிறது.
இந்த சம்பவத்தை காவல்துறை விசாரித்து வருவதாகவும், ரசிகர்கள் பொறுமை காக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சயீப் அலிகான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், குடும்பத்தில் உள்ள மற்ற அனைவரும் நலமுடன் இருப்பதாக அவரின் மனைவி கரீனா கபூரின் தரப்பிலும் பொதுமக்களுக்கும் ரசிகர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக சயீப் அலிகான் இல்லத்தில் பணியாற்றி வந்த பணிப்பெண்ணுக்கும், தாக்குதல் நடத்திய அடையாளம் தெரியாத நபருக்கும் என்ன தொடர்பு என்ற கோணத்தில் விசாரணை தொடங்கியுள்ளது. சயீப் அலிகான் மீது நடைபெற்ற தாக்குதல் சம்பவம் கொள்ளை முயற்சியா அல்லது திட்டமிட்ட தாக்குதலா? என்பது காவல்துறை நடத்தும் விசாரணையில் தெரியவரும். இதனிடையே தாக்குதல் தொடர்பான சிசிடிவி காட்சிகளை காவல்துறை வெளியிட்டுள்ளது.