பரந்தூர் பசுமை விமானநிலையத்திட்டத்திற்கு எதிராக இரண்டு ஆண்டுகளாக போராடிவரும் மக்களை சந்தித்து தவெக தலைவர் விஜய் ஆதரவு தெரிவிக்க உள்ளார். பனையூரில் இருந்து பரந்தூருக்கு செல்லும் விஜய் அடுத்ததாக வேங்கைவயலுக்கும் செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
2026 சட்டமன்ற தேர்தலை இலக்காக நிர்ணயித்து தமிழக வெற்றிக்கழகம் எனும் அரசியல் கட்சியை தொடங்கியிருக்கும் நடிகர் விஜய், விக்கிரவாண்டி இடைத்தேர்தலை தொடர்ந்து பிப்ரவரி 5 ஆம் தேதி நடைபெற இருக்கும் ஈரோடு கிழக்குத் தொகுதி தேர்தலையும் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளார்.
அரசியல் கட்சி தொடங்கிய ஒரு வருட காலத்தில் நடிகர் விஜய், தனது முதல் மாநில மாநாடு மற்றும் அம்பேத்கர் புத்தக வெளியீடு நிகழ்வு ஆகிய இரண்டு நிகழ்வுகளைத் தவிர வேறு எந்த பொது நிகழ்வுகளிலும் கலந்து கொள்ளவில்லை என்ற விமர்சனம் எழத் தொடங்கியுள்ளது. அதனை உறுதி செய்யும் விதமாக கட்சிக் கொடி அறிமுகம் மற்றும் பாடல் வெளியீட்டு விழாவையும் தனது பனையூர் இல்லத்திலேயே நடத்தி முடித்தார் தவெக தலைவர் விஜய்.
அதோடு, கட்சியின் கொள்கைத் தலைவர்களாக அறிவிக்கப்பட்டுள்ள பெரியார், வேலூநாச்சியார் ஆகியோரின் நினைவுநாட்களில் கூட பனையூர் இல்லத்திலேயே புகைப்படங்களுக்கு மரியாதை செலுத்திய விஜய், நடிகை கீர்த்தி சுரேஷின் திருமணத்திற்கும், அவரின் தலப் பொங்கல் நிகழ்விலும் நேரடியாக கலந்து கொண்டது சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதப் பொருளாக மாறியது.
களத்திற்கு வராமல், மக்களை சந்திக்காமல் அரசியல் நடத்த முடியாது என்பதை உணர்ந்த விஜய், தற்போது தனது முதல் நிகழ்வாக பரந்தூர் பகுதி மக்களை சந்திக்க திட்டமிட்டுள்ளார். பரந்தூர் பசுமை விமான நிலையத்திட்டத்திற்கு எதிராக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக போராடி வரும் மக்களை நேரில் சந்தித்து தவெக தலைவர் விஜய் தனது முழு ஆதரவை தெரிவிப்பார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இதற்காக காவல்துறையினரிடம் அனுமதி கோரியும் தவெக நிர்வாகிகள் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. கட்சி தொடங்கிய பிறகு மக்களை சந்திக்கும் முதல் நிகழ்வு என்பதால் தமிழக வெற்றிக் கழகத்திற்கும், அதன் தலைவர் விஜய்க்கும் இந்த நிகழ்வு முக்கியத்துவம் வாய்ந்தது என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், ஆளும் திமுக, எதிர்க்கட்சி அதிமுக உள்ளிட்ட மாநில மற்றும் தேசியக் கட்சிகள் என அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தியிருக்கும் நிலையில், தவெகவில் நிர்வாகிகள் நியமனம் கூட முழுமையாக நடைபெறாமல் இருப்பது அக்கட்சி நிர்வாகிகள் மத்தியிலேயே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தின் செயல்பாடுகளும், அவர் தொடர்பாக வெளியாகும் தொலைபேசி உரையாடல்களும் அவ்வப்போது சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றன.
பரந்தூர் பகுதி மக்களை சந்தித்தே ஆக வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் தவெக தலைவர் விஜய், அடுத்த கட்டமாக வேங்கைவயலுக்கும் செல்ல முடிவெடுத்திருப்பதாகவும் தமிழக வெற்றிக் கழகத்தின் மூத்த நிர்வாகிகள் மத்தியில் பரபரப்பாக பேசப்படுகிறது.