விரோதிகளுக்கு எதிராக, திமுக அரசு காவல்துறையினருக்கு முழு சுதந்திரம் வழங்க வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்..
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
சென்னை தாம்பரம் காவல் எல்லைக்குட்பட்ட சேலையூர், மணிமங்கலம், கூடுவாஞ்சேரி, மறைமலைநகர், உள்ளிட்ட எட்டு இடங்களில், ஒரே நாளில் செயின் பறிப்பு சம்பவம் நடைபெற்றிருப்பது பெரும் அதிர்ச்சியையும், பொது மக்களிடையே அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பணிபுரியும் பெண் காவலர், சீருடையில் இருக்கும்போதே அவரது கழுத்தில் இருந்த தாலிச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு சென்றிருக்கின்றனர்.
திமுக அரசு, சமூக வலைத்தளத்தில் இயங்கும் பாஜக தொண்டர்களைப் பின்தொடர்வதையே காவல்துறையின் முழுநேரப் பணியாக மாற்றியதன் விளைவு, சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து, பெண் காவலரிடமே செயின் பறிப்புச் சம்பவம் நடக்கும் அளவுக்கு, தமிழக மக்கள் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கியிருக்கிறது.
திமுக அரசு, இனியும் காவல்துறையினரை, அரசியல் பழிவாங்குதலுக்குப் பயன்படுத்துவதை விட்டுவிட்டு, சமூக விரோதிகளுக்கு எதிராக, காவல்துறையினருக்கு முழு சுதந்திரம் வழங்க வேண்டும்.
காவல்துறையினரும், திமுகவின் அதிகார துஷ்பிரயோகங்களைப் புறக்கணித்துவிட்டு, தங்கள் முதற்கடமையான சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபடவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.