கேரள மாநிலத்தை உலுக்கிய விஷம் கொடுத்து காதலனை கொலை செய்த வழக்கில், குற்றவாளி என அறிவிக்கப்பட்டிருக்கும் கிரீஷ்மாவுக்கு தூக்கு தண்டனை விதித்து நெய்யாற்றின்கரை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தமிழக, கேரள எல்லையான பாறசாலை மூரியங்கரையைச் சேர்ந்த ஷாரோன்ராஜும், ராமவர்மன் சிறையைச் சேர்ந்த கிரீஷ்மாவும் கடந்த 2022-ஆம் ஆண்டில் காதலித்து வந்தனர்.
இந்த நிலையில், ராணுவ வீரர் ஒருவருடன் கிரீஷ்மாவுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்ததால், காதலனுடன் பேசுவதை கிரீஷ்மா தவிர்த்தார். இருவரும் நெருக்கமாக இருந்த புகைப்படங்கள் ஷாரோனிடம் இருந்ததால், அவரை வீட்டுக்கு அழைத்த கிரீஷ்மா, பழச்சாற்றில் விஷம் கலந்து கொலை செய்ய முயன்றார்.
இருப்பினும் ஷாரோன் உடலில் எந்த மாற்றமும் ஏற்படாததால், கஷாயத்தில் விஷம் கலந்து கொடுத்து காதலனை கிரீஷ்மா கொலை செய்தார்.
இதுதொடர்பாக பாறசாலை போலீஸார் வழக்குப் பதிவு செய்து கிரீஷ்மா, அவரது தாயார் சிந்து, தாய்மாமா நிர்மலாகுமரன் ஆகிய மூன்று பேரையும் கைது செய்தனர்.
இந்த வழக்கில் கிரீஷ்மாவும் அவரது தாய்மாமா நிர்மலா குமரனும் குற்றவாளிகள் என ஏற்கெனவே தீர்ப்பளிக்கப்பட்ட நிலையில், கிரீஷ்மாவுக்கு மரண தண்டனையும், நிர்மலா குமரனுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து நெய்யாற்றின்கரை மாவட்ட நீதிமன்ற நீதிபதி ஏ.எம். பஷீர் தீர்ப்பளித்தார். முன்னதாக போதிய ஆதாரம் இல்லாததால், கிரீஷ்மாவின் தாய் சிந்து விடுவிக்கப்பட்டார்.