வயநாடு பேரிடரை சுட்டிக்காட்டி, முல்லைப் பெரியாறு அணையின் நீரின் அளவை குறைக்க கோரியும், நிபுணர் குழு மூலம் அணையை மறுஆய்வு நடத்தக்கோரிய மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 120 அடியாக குறைக்க கோரியும், அணை பாதுகாப்பு தொடர்பாக நிபுணர் குழு மூலம் மறுஆய்வு செய்ய வலியுறுத்தியும் கேரளாவை சேர்ந்த வழக்கறிஞர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு நீதிபதிகள் விக்ரம் நாத், சஞ்சய் கரோல், சந்தீப் மேத்தா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில், இந்த வழக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்றும், மக்களின் உயிர் பிரச்சனை என்பதால் நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து நீதிபதிகள், முல்லைப்பெரியாறு அணை பாதுகாப்பு தொடர்பான வழக்கை ஏற்கனவே நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு விசாரித்து உத்தரவு பிறப்பித்துள்ளது என்பதை சுட்டிக்காட்டினர்.
மேலும், இந்த வழக்கையும் நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வே விசாரிக்கட்டும் எனக்கூறிய நீதிபதிகள், தங்களது அமர்வு இந்த வழக்கை விசாரிக்காது என திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்தனர்.