பிறப்பால் குடியுரிமை வழங்குவதற்கு தடை விதித்து அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் உத்தரவிட்டதை எதிர்த்து, 22 மாகாணங்கள் சார்பில், நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபராக கடந்த 20ம் தேதி டொனால்டு ட்ரம்ப் பதவியேற்றார். முதல் நாளிலேயே, பிறப்பால் குடியுரிமை வழங்கப்படுவதில் சில கட்டுப்பாடுகளை விதித்து அவர் உத்தரவு பிறப்பித்தார். அதன்படி, சட்டவிரோதமாக அமெரிக்காவில் வசிக்கும் பெற்றோருக்கும், பணி காரணமாக அமெரிக்காவுக்கு வந்த பெற்றோருக்கும் பிறக்கும் குழந்தைகளுக்கு பிறப்பால் குடியுரிமை வழங்க முடியாது என தெரிவித்தார்.
இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து 22 மாகாணங்கள் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த மாகாணங்களின் தலைமை வழக்கறிஞர்கள், நூற்றாண்டுகளுக்கு மேல் அமலில் உள்ள சட்டங்களில் திருத்தம் மேற்கொள்ள அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு அதிகாரம் இல்லை என தெரிவித்தனர். மேலும், சட்டம் ஏற்கெனவே வழங்கியுள்ள சில உரிமைகளையும் ட்ரம்ப்பால் பறிக்க முடியாது என்றும் தெரிவித்தனர்.
இதனிடையே, அமெரிக்காவில் செயல்படும் சிறப்பு திட்ட அலுவலகங்களை உடனடியாக மூட அதிபர் டொனால்டு ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார். பல்வேறு சலுகைகளின் கீழ் அரசுப் பணிகளில் ஆட்கள் சேர்க்கப்படுவதை தடுக்கும் விதமாக இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். அதன்படி சிறப்பு திட்ட அலுவலகங்களில் பணியாற்றுவோரின் பட்டியலை அனுப்பவும், அவர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.