சீனாவின் ஆதிக்கத்தில் உள்ள பனாமா கால்வாய், அமெரிக்கா வசம் வரப்போகிறது என பதவியேற்பு விழாவில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியிருக்கிறார். பனாமா கால்வாயை மீட்டெடுக்க ஏன் ட்ரம்ப் விரும்புகிறார் ? அதனால் அமெரிக்காவுக்கு என்ன லாபம் ? அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
பனாமா என்பது மத்திய அமெரிக்க நாடுகளில் ஒன்று. இந்த நாட்டின் வழியாக அமைக்கப்பட்டுள்ள கால்வாய்க்கு பனாமா கால்வாய் என்று பெயர்.
கப்பல்கள், தென் அமெரிக்காவின் கடைக்கோடி முனையை சுற்றிக்கொண்டு செல்வதை தவிர்க்கும் வகையில் உருவாக்கப்பட்டதே இந்த கால்வாய். இந்தக் கால்வாய் சுமார் 82 கிலோ மீட்டர் நீளமுள்ளதாகும்.
இந்த கால்வாய் உலக வர்த்தகத்தை பெரிதும் எளிதாக்குகிறது, ஏனெனில் இது பயண நேரத்தை கிட்டத்தட்ட 8,000 கடல் மைல்கள் மற்றும் 18 நாட்கள் பயண நேரம் குறைத்து உலகளாவிய விநியோகச் சங்கிலிக்கு பங்களிக்கிறது. இந்த பனாமா கால்வாய், 170 நாடுகளில் உள்ள 2,000 துறைமுகங்களை இணைக்கிறது.
இது, ஒரு முனையில் அட்லாண்டிக் பெருங்கடலையும், மற்றொரு முனையில் பசிபிக் பெருங்கடலையும் இணைக்கிறது.
ஒரு காலத்தில், கொலம்பியாவில் இருந்து விடுதலையை அடைய பனாமா போராடிக் கொண்டிருந்தது. அன்றைய அமெரிக்க அதிபர் தியோடர் ரூஸ்வெல்ட், பனாமா சுதந்திரம் பெற உதவி செய்தார். பனாமாவின் சுதந்திரம் அமெரிக்காவின் கனவு கால்வாய் திட்டம் நிஜமாக அடித்தளம் அமைத்தது.
1914ல் பெரும் பொருட்செலவில், பல்லாயிரம் தொழிலாளர்கள் உழைப்பில் பனாமா கால்வாயை அமெரிக்கா கட்டி முடித்தது. தொடர்ந்து அமெரிக்காவே பனாமா கால்வாயை நிர்வகித்தும் வந்தது.
இந்தக் கால்வாய் திறக்கப்பட்டு 110 ஆண்டுகள் ஆகின்றன. அமெரிக்காவின் வசம் கால்வாய் இருப்பதை எதிர்த்து பனாமாவில் பல ஆண்டுகளாக தொடர் போராட்டங்கள் நடந்துள்ளன. அந்த நாட்டு அரசும், தங்களிடம் கால்வாயை ஒப்படைக்க வேண்டும் என்று தொடர்ந்து வற்புறுத்தியது.
இதன் விளைவாக இரு நாடுகளும் 1977ம் ஆண்டு ஒரு ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொண்டன. அதன் அடிப்படையில், 1999ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி பனாமா வசம் கால்வாய் ஒப்படைக்கப்பட்டது. அன்று முதல் பனாமா நாட்டு அரசுதான் இந்த கால்வாயை நிர்வகித்து வருகிறது.
உலக கடல் வர்த்தகத்தில் 5 சதவீதம் பனாமா கால்வாய் வழியாக நடைபெறுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் 14 ஆயிரம் கப்பல்கள் இந்த பனாமா கால்வாய் வழியாகச் செல்கின்றன. அமெரிக்காவின் கப்பல்களில் சுமார் 75 சதவீதம், பனாமா கால்வாய் வழியாகதான் சென்று வருகின்றன.
இதற்காக பெரும் கட்டணத்தை அமெரிக்காவிடம் பனாமா வசூலிக்கிறது. அமெரிக்க கடற்படை கப்பல்கள் சென்று வந்தால் கூட பனாமா அரசு கட்டணம் வசூலிக்கிறது.
பசிபிப் பெருக்கடலில் பால்போவா துறைமுகமும் , அட்லாண்டிக் பெருங்கடலில் கிறிஸ்டோபல் துறைமுகமும் உள்ளன. இந்த இரண்டு துறைமுகங்களை சீனாவின் Hutchison Whampoa என்ற நிறுவனம் நடத்துகிறது.
இந்த சூழலில், பனாமா கால்வாய் நிர்வாக உரிமையை பனாமா நாட்டுக்கு அமெரிக்கா வழங்கியது ஒரு முட்டாள்தனமான பரிசு என்று குறிப்பிட்ட அதிபர் டிரம்ப், பனாமா கால்வாயை சீனா தன வசம் வைத்துள்ளது என்று குற்றஞ்சாட்டியிருந்தார்.
முதலில் பனாமா கால்வாய்க்கான கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று கூறிய அதிபர் ட்ரம்ப், அடுத்து பனாமா கால்வாய் மீதான கட்டுப்பாட்டை அமெரிக்காவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.
இந்நிலையில், அமெரிக்கா இந்த கால்வாயை கட்டுவதற்கு ஏராளமான பணத்தை செலவழித்துள்ளதாகவும், சுமார் 38,000 அமெரிக்கர்கள் கட்டுமானத்தின் போது உயிரிழந்துள்ளதாகவும், அதிபர் ட்ரம்ப் கூறியுள்ளார்.
மேலும், கொடுத்த வாக்குறுதியை பனாமா காப்பாற்றவில்லை என்று குற்றஞ்சாட்டிய ட்ரம்ப், பனாமா கால்வாயை திரும்ப பெறுவோம் என்று உறுதிபட தெரிவித்தார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் பேச்சை முற்றிலும் மறுத்துள்ள பனாமா அதிபர் ஜோஸ் ரால் முலினோ, பனாமா கால்வாய் தொடர்ந்து பனாமா நாட்டுக்கு மட்டுமே சொந்தமாக இருக்கும் என்று கூறியுள்ளார்.
மேலும், தங்கள் நிர்வாகத்தில் தலையிட உலகில் எந்த நாட்டுக்கும் அனுமதியில்லை என்றும், கால்வாயின் உரிமையையும் நாட்டின் இறையான்மையையும் யாருக்கும் விட்டு கொடுக்க மாட்டோம் என்றும் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கப் படையெடுப்பு இல்லாமல் பனாமா கால்வாயை ட்ரம்ப் மீட்பாரா என்பது தான் இப்போதைய கேள்வி.