வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை மாணவர்கள் தங்கள் பெற்றோருக்கு உணர்த்தி அவர்களை வாக்களிக்க வலியுறுத்த வேண்டும் என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
நிகழ்ச்சி தொடங்கியதும் வாக்காளர் உறுதிமொழியை ஆளுநர் முன்மொழிய, அதனை வழிமொழிந்து பங்கேற்பாளர்கள் அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
தொடர்ந்து தேர்தல் நேரங்களில் சிறப்பாக பணியாற்றிய மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பு பரிசுகள் வழங்கி கௌரவித்தார்.
மாநிலம் முழுவதும் தேர்தல் மற்றும் வாக்களிப்பின் முக்கியத்துவம் குறித்து நடத்தப்பட்ட போட்டிகளில் பங்கேற்று, வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கும், மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்தவர்களுக்கும் நிகழ்ச்சியில் பரிசுகள் வழங்கப்பட்டன.
முன்னதாக காணொலி வாயிலாக நிகழ்ச்சியில் உரையாற்றிய இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், நாட்டின் வாக்காளர்கள் எண்ணிக்கை விரைவில் 100 கோடியை எட்டவுள்ளதாகவும், வாக்காளர் சதவீதத்தை பெருக்கி அதை சாத்தியப்படுத்த அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும் எனவும் தெரிவித்தார்.
தொடர்ந்து நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய ஆளுநர் ஆர்.என்.ரவி, இன்றைய டிஜிட்டல் காலகட்டத்தில் வாக்களிப்பதை ஊக்குவிப்பதை தாண்டி, வாக்காளர்களை திசை திருப்பும் முயற்சிகளே அதிகம் நடப்பதாக குற்றம் சாட்டினார்.
நாம் ஏன் வாக்களிக்க வேண்டும் என்று கூறுபவர்களிடம் நாம் கவனமாக இருக்க வேண்டும் என எச்சரித்த அவர், நம் நாட்டில் நடக்கும் ஜனநாயக முறையிலான வாக்களிப்பை யாரும் குறை கூற முடியாது எனவும் தெரிவித்தார்.
மேலும், மாணவர்கள் தங்கள் பெற்றோருக்கு வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை உணர்த்தி அவர்களை வாக்களிக்க வலியுறுத்த வேண்டும் எனவும் ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவுறுத்தினார்.