சுப முகூர்த்த தினத்தையொட்டி தமிழக முழுவதும் சார் பதிவாளர் அலுவலகங்கள் செயல்படும் என அரசு அறிவித்துள்ள நிலையில், பல இடங்களில் அலுவலகங்கள் திறக்கப்படவில்லை.
அசையா சொத்துக்கள் குறித்த ஆவணப்பதிவுகளை மங்களகரமான நாட்களில் மேற்கொள்ள பொதுமக்கள் விரும்புவதால் பொது விடுமுறை நாட்களில் பத்திரப்பதிவு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.
தமிழகம் முழுவதும் உள்ள 578 சார் பதிவாளர் அலுவலகங்களில் 11 ஆயிரம் பேர் பணியாற்றி வரும் நிலையில், பத்திரப்பதிவுத்துறை மூலம் பல கோடி ரூபாய் வருவாய் ஈட்டி தரும் தங்களை அரசு கண்டுகொள்ளவில்லை என பணியாளர்கள் குற்றச்சாட்டி வருகின்றனர்.
இதனிடையே, தை மாதத்தில் வரும் சுப முகூர்த்த தினமான இன்றும் பத்திரப்பதிவுத்துறை அலுவலகங்கள் செயல்படும் என்ற அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பத்திரப்பதிவுத்துறை பணியாளர் சங்கங்களின் கூட்டமைப்பு அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது.
இந்நிலையில், கோரிக்கையை ஏற்க அரசு முன்வராததால் காலை முதல் பத்திரப்பதிவுத்துறை பணியாளர்கள் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் உள்ளிட்ட பகுதிகளில் பத்திரப்பதிவு அலுவலகங்கள் மூடி கிடப்பதால், சொத்துகளை ஆவணப்படுத்த வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.