ஆற்காடு அருகே ஒரு மணி நேர விழாவில் பங்கேற்கும் அமைச்சரின் வருகைக்காக புதிய தார் சாலை போடப்பட்ட சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அருகே உள்ள தாழனூர் கிராமத்தில் 5 கோடியே 94 லட்சம் ரூபாய் மதிப்பில் 9 துணை சுகாதார நிலையம் அமைப்பதற்காக அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
இந்த விழாவில் கலந்து கொண்ட மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம், புதிய சுகாதார நிலையத்திற்கு அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் அமைச்சரின் வருகைக்காக மக்கள் நடமாட்டமே இல்லாத இடத்தில் தார் சாலை அவசர அவசரமாக அமைக்கப்பட்டதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
தங்கள் பகுதிக்கு சாலை வசதி கோரி பலமுறை மனு அளித்தும், அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம்சாட்டிய அவர்கள், அமைச்சரின் வாகனம் சொகுசாக வந்து செல்வதற்காக புதிய தார் சாலை அமைத்து தரப்பட்டதாக வேதனை தெரிவித்தனர்.