தமிழகத்தில் நடைபெறும் முறைகேடுகளை அம்பலப்படுத்துவதால் சமூக செயற்பாட்டாளர்களும், அரசு அதிகாரிகளும் கொல்லப்படுவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.
காவல்துறை பணி நியமன முறைகேடுகளை வெளிக்கொண்டு வந்ததால் தனது அலுவலகம் எரிக்கப்பட்டதாக ஏடிஜிபி கல்பனா நாயக், டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு கடிதம் எழுதினார்.
இதை சுட்டிக்காட்டி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அண்ணாமலை,
விதிமீறலும், சட்ட மீறலும், திமுக அரசின் கீழ் தமிழகத்தில் வழக்கமாகிவிட்டது. இந்த அரசு செயல்படும் பரிதாப நிலை குறித்துப் பேசும் காவல்துறை உயர் அதிகாரிகள் கூட, இதில் இருந்து தப்பிக்க முடியவில்லை.
காவல்துறை துணை ஆய்வாளர்கள் நியமனத்தில், தற்போதைய மற்றும் கடந்த காலங்களில் நடந்த முறைகேடுகளை, ஏடிஜிபி கல்பனா நாயக் அவர்கள் சுட்டிக்காட்டியதற்குப் பரிசாக, அவரது அலுவலகம் எரிக்கப்பட்டிருக்கிறது.
மேலும் தீ விபத்து நடந்தபோது அவர் அலுவலகத்தில் இருந்திருந்தால், அவர் உயிரையும் இழந்திருக்க நேர்ந்திருக்கும். இன்னும் மோசமான விஷயம் என்னவென்றால், இந்தச் சம்பவத்தில் உண்மையான விசாரணை நடத்த வேண்டும் என்ற அவரது தொடர்ச்சியான வேண்டுகோளை தமிழகக் காவல்துறை புறக்கணித்ததாகத் தெரிகிறது. ஏன்?
காவல்துறை உயர் அதிகாரிகள் இதை மின்சாரப் பழுது காரணமாக ஏற்பட்ட தீ விபத்து என்று கூறி மறைக்க முயன்றாலும், தீ விபத்துக்கு முந்தைய நிகழ்வுகள், காவல்துறையின் இந்தக் கூற்றை நம்பமுடியாததாக ஆக்குகிறது. ஏனெனில், ஏடிஜிபி கல்பனா நாயக் அவர்கள், முடிவெடுக்கும் பொறுப்பில் இருந்து விலக்கி வைக்கப்பட்டதோடு, துணை ஆய்வாளர்களின் திருத்தப்பட்ட பட்டியலை வெளியிடுவதற்கு முன்பு அவரது ஒப்புதலும் பெறப்படவில்லை.
தமிழ்நாட்டில் ஊழல், தவறான நிர்வாகம் மற்றும் முறைகேடுகளை அம்பலப்படுத்தியதற்காக, சமூக ஆர்வலர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் கொல்லப்படுகிறார்கள். காவல்துறை உயர் அதிகாரிகள் கூட, தமிழகத்தில் பாதுகாப்பாக உணரவில்லை.
தமிழக முதல்வர் ஸ்டாலினின் இரும்புக்கரம், நீதியை நிலைநிறுத்துவதற்குப் பதிலாக, உண்மையை மௌனமாக்குவதற்கு மட்டுமே பயன்படுத்தப்படுவதாகத் தெரிகிறது என அண்ணாமலை விமர்சித்துள்ளார்.