கொடிகம்பம் அமைக்க அனுமதி கோரிய தவெக விண்ணப்பம் மீது 6 வாரங்களில் முடிவெடுக்க வேண்டும் என சென்னை மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை அமைந்தகரையில் உள்ள திருவீதி அம்மன் கோயில் தெருவில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடிக்கம்பம் அமைக்க, மாநகராட்சிக்கு உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்றத்தில் அக்கட்சி தரப்பினர் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு நீதிபதி ஜெ.சத்திய நாராயண பிரசாத் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில், திருவீதி அம்மன் கோவில் தெருவில் பல்வேறு கட்சிகளின் சார்பில் கொடிக்கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
மற்ற கட்சிகளின் கொடிக்கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், தவெகவின் கொடிக்கம்பம் அமைக்க அதிகாரிகள் ஆட்சேபனை தெரிவிப்பதாக கூறப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, மாநகராட்சியிடம் மீண்டும் புதிதாக மனு அளிக்க வேண்டும் என மனுதாரருக்கு உத்தரவிட்டார்.
மேலும், புதிய விண்ணப்பத்தின் மீது 6 வாரங்களில் சென்னை மாநகராட்சி முடிவெடுக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.