குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் அருகே விண்வெளி பூங்கா அமைக்க தமிழக அரசு சார்பில் நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 250-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகேயுள்ள குலசேகரப்பட்டினம் பகுதியில் இஸ்ரோ சார்பில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
அதற்கு அருகேயுள்ள ஆதியாக்குறிச்சி ஊராட்சி பகுதியில் தமிழக அரசு சார்பில், 1200 ஏக்கர் பரப்பளவில் விண்வெளி பூங்கா அமைக்கப்படும் என கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது.
தொடர்ந்து ஆதியாக்குறிச்சி, மாதவன் குறிச்சி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 1200 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. 4 தாசில்தார்கள் தலைமையில் அதற்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில், நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து உடன்குடி பஜார் பகுதியில் அப்பகுதிகளைச் சேர்ந்த 250-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து அனுமதியின்றி போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார் கைது நடவடிக்கை மேற்கொண்டனர்.