தமிழகத்தில் டெங்கு பாதிப்பு மூன்று மடங்காக அதிகரித்துள்ளதாக பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,
தமிழகத்தில் கடந்த 2024-ம் ஆண்டில் ஒட்டுமொத்தமாக 27ஆயிரத்து 378 நபர்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 13 நபர்கள் உயிரிழந்தனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக கடந்த டிசம்பர் மாதத்தில் மட்டும் 3 ஆயிரத்து 687 நபர்களுக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டு, அதே மாதத்தில் நான்கு பேர் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், கடந்த 2023-ம் ஆண்டு டெங்கு காய்ச்சலால் ஒட்டுமொத்தமாக 9 ஆயிரத்து 121 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டிருந்தனர் எனவும் கூறப்பட்டுள்ளது.
இதன் மூலம் 2024-ம் ஆண்டில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 3 மடங்காக அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது.
இதேபோல் 2024 ஆம் ஆண்டு 343 நபர்களுக்கு மலேரியா பாதிப்பும், 2 ஆயிரத்து 817 பேருக்கு டைபாய்டு காய்ச்சல் பாதிப்பும் கண்டறியப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.