தமிழகத்தில் எழுந்த இந்து எழுச்சி திமுகவை வீழ்த்தும் என தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில் கூறியுள்ளதாவது : “தமிழ் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில், முதலாம் படைவீடான, திருப்பரங்குன்றம் மலையை பாதுகாக்க, இந்து அமைப்புகள் அறிவித்த அறவழிப் போராட்டத்தை நசுக்கி, ஒடுக்க இந்து விரோத திமுக அரசு எடுத்த அனைத்து முயற்சிகளையும் ‘இந்து எழுச்சி’ முறியடித்திருக்கிறது.
தமிழ் கடவுள் முருகன் வீற்றிருக்கும் மலையில் ஆக்கிரமிப்பாளன் சிக்கந்தரின் சமாதி எப்படி வர முடியும்? தமிழ் கடவுள் முருகனின் மலையை அபகரிக்க நடந்த முயற்சியே சிக்கந்தர் தர்கா என்ற வரலாற்று பிழை நாடகம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
வரலாற்றை மறைத்து திருப்பரங்குன்றம் மலையில் இடையில் ஏற்பட்ட தர்காவினை தற்போது காரணம் காட்டி, முருகனை வழிபட தமிழர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை இந்து விரோத திமுக அரசு விதித்து வருகிறது.
தமிழர்களின் முக்கியமான திருவிழாவான கார்த்திகை தீபத்தின் போது, முருகனின் அறுபடை வீடான திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற கூட அனுமதி மறுக்கும் அவலம் நடப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
திமுக. சிறுபான்மை வாக்கு வங்கிக்காக, இப்போது தமிழ் கடவுள் முருகனையே கைவிட்டு விட்டது. அதனால்தான், இஸ்லாமிய மதத்திலேயே இல்லாத ஆடு, கோழிகளை பலி கொடுக்கும் போராட்டத்தை கண்டுகொள்ளாத திமுக அரசு, முருகனின் மலையை காக்கும் இந்துக்களின் போராட்டத்தை மட்டும் ஒடுக்க நினைக்கிறது.
இப்போது காலம் மாறிவிட்டது. திமுகவின் ஏமாற்று வேலையை, இந்து விரோத தன்மையை, இந்து தமிழர்கள் புரிந்து கொண்டு விட்டார்கள். அதன் வெளிப்பாடே, மதுரை பழங்காநத்தம் திரண்ட கூட்டம் என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்துக்கள் போராட்டம் அறிவித்ததும், அதனை ஒடுக்க அத்தனை அராஜக வழிமுறைகளையும் திமுக அரசு பின்பற்றியது. மதுரை மாவட்டத்தில் 144 தடை உத்தரவு போடப்பட்டிருந்தாலும், தமிழகம் முழுதும் அனைத்து மாவட்டங்களிலும் இந்து அமைப்புகள், பாஜக நிர்வாகிகளை தேடி தேடி திமுக அரசு கைது செய்தது. பலரை வீட்டிலிருந்து வெளியே வர முடியாதபடி காவல்துறையை வைத்து முடக்கியதாக அவர் கூறியுள்ளார்.
எமர்ஜென்சி காலத்தில் கூட இந்த அளவுக்கு அடக்குமுறை நடந்திருக்காது. அந்த அளவுக்கு அடக்குமுறை ஏவி விட்டும், முருக பக்தர்களிடம் அது பலிக்கவில்லை. தமிழகத்தில் இந்து எழுச்சி ஏற்பட்டு விட்டது என்பதன் அடையாளமே திருப்பரங்குன்றம் மலையை காக்க நடந்த போராட்டம் என அவர் தெரிவித்துள்ளார்.
எனவே, இனியும் வழக்கம்போல இந்துக்களை ஏமாற்றாமல், திருப்பரங்குன்றம் மலை, தமிழ் கடவுள் முருகனின் மலை என்பதை தமிழக அரசு உறுதிப்படுத்த வேண்டும். அங்கு இந்துக்கள் வழிபட எந்த தடையும் விதிக்கக்கூடாது. இதையும் மீறி சிறுபான்மை வாக்கு வங்கிக்காக இந்துக்களை அடக்க, ஒடுக்க நினைத்தால் வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் இந்துக்கள் சரியான பதிலடி தருவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.