விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில், 6 பேர் காயமடைந்தனர்.
விருதுநகர் அருகே கோவில்புலி குத்தியில் மோகன்ராஜ் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை செயல்பட்டு வந்தது. இங்கு பயங்கர சப்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டதால், தீப்பற்றி எரிந்தது. தகவலறிந்து தீயணைப்புத் துறையினர் வந்த போதிலும், பட்டாசுகள் தொடர்ந்து வெடித்ததால் அரை மணி நேரமாக தீயை அணைக்க முடியாமல் போராடினர்.
பின்னர், ஒரு மணிநேர போராட்டத்துக்குப் பின் தீ முற்றிலும் அணைக்கப்பட்டது. வெடிவிபத்தில் 10-க்கும் மேற்பட்ட அறைகள் முற்றிலும் சேதமடைந்தன. தீக்காயங்களுடன் ராமலட்சுமி என்ற பெண் உயிரிழந்த நிலையில், ஒரு ஆண் உட்பட 6 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இச்சம்பவம் தொடர்பாக போர்மேன் செல்வகுமாரை போலீஸார் கைது செய்த நிலையில், தலைமறைவாக உள்ள ஆலை உரிமையாளரை தேடி வருகின்றனர்.
இதனிடையே பட்டாசு விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு 4 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இதேபோல பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா 2 லட்ச ரூபாயும், லேசான காயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் நிவாரணமாக வழங்கப்படும் என அறிவித்துள்ளது.