நெல்லையில் இன்று முதல்வர் வருகையையொட்டி, சாலைகளுக்கு வர்ணம் பூசி அதிகாரிகள் மேக்கப் போட்டதாக புகார் எழுந்துள்ளது.
மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், கடந்த 2018 -ஆம் ஆண்டு திட்டப்பணிகள் தொடங்கப்பட்டன.
இருப்பினும், பாளையங்கோட்டை உட்பட பல இடங்களில் பணிகள் முழுமை பெறவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், பல்வேறு நலத்திட்டங்களை துவக்கிவைக்க 2 நாள் பயணமாக முதல்வர் ஸ்டாலின் இன்று நெல்லை வருவதை அறிந்த அதிகாரிகள், முதல்வர் செல்லும் சாலைகள் அனைத்தும் சீரமைத்துள்ளனர்.
மேலும், மின் விளக்கு உள்ளிட்டவைகளை சீர் செய்துள்ளனர். கே.டி.சி நகர் பாலத்திற்கு பெயிண்ட் அடித்து ஜொலிக்க வைத்துள்ளனர். மேலும், முதல்வர் காண்வாய் செல்லும் சாலைகள் முழுவதும் வேகத்தடைகள் அகற்றப்பட்டன.
திமுக நிர்வாகிகள், போட்டி போட்டுக் கொண்டு டிஜிட்டல் பேனர் வைத்துள்ளனர். பழுதடைந்த சாலைகளை சரி செய்ய எத்தனை எத்தனையோ போராட்டங்கள் நடந்தியபோது கண்டு கொள்ளாத அதிகாரிகள், முதல்வரிடம் நல்ல பெயர் வாங்குவதற்காக சாலைகளை சீரமைத்துள்ளதாக பொது மக்கள் குற்றம் சாட்டினர்.