விமான நிலையத்தில் புதுமண பெண்ணின் தாலியை பறிமுதல் செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க சுங்கத்துறை ஆணையருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2023ஆம் ஆண்டு இலங்கையில் இருந்து சென்னை வந்த தனுஷிகா என்பவரரை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அவர் அணிந்திருந்த வளையல், தாலி உள்ளிட்டவை குறித்து கேள்வி எழுப்பிய அதிகாரிகள் அவற்றை பறிமுதல் செய்தனர்.
இந்த நகைகளை திருப்பித் தர உத்தரவிட கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தனுஷிகா வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி,
நமது மரபுப்படி அதிக எடையில் தாலி சங்கிலி அணிவது வழக்கம் என்றும், இந்த மரபுகளுக்கு அதிகாரிகள் மதிப்பளிக்க வேண்டும் எனவும் கூறினார்.
கணவருடன் இன்னும் மண வாழ்க்கையை தொடங்காத பெண்ணின் தாலி சங்கிலியை அகற்றிய செயல் நியாயமற்றது எனக் கூறி நீதிபதி, நகைகளை திருப்பி ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிட்டார். மேலும், தாலிச் சங்கிலி பறிமுதல் செய்த அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க சுங்கத்துறை ஆணையருக்கு நீதிபதி ஆணையிட்டார்.