தமிழ்நாட்டில் தினமும் நடக்கும் பாலியல் வன்கொடுமை சம்பவங்களை தடுக்காமல், சட்டம் ஒழுங்கை முழுமையாக சீரழித்துள்ள திமுக அரசின் அலட்சியப் போக்கு கடும் கண்டனத்திற்கு உரியது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், போச்சம்பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வரும் மாணவியை அதே பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் நால்வர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ள நிகழ்வு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்த வேதனை செய்தி மறைவதற்குள் மணப்பாறை மணப்பாரப்பட்டியில் தனியார் பள்ளி சிறுமிக்கு தாளாளர் உள்ளிட்டோர் பாலியல் துன்புறுத்தல் அளித்த செய்தி வெளியாகி துயரத்தை அதிகரித்ததாக தெரிவித்துள்ளார்.
தி.மு.க. ஆட்சியில் பள்ளிக்குழந்தைகள் முதல் பல்கலைக்கழக மாணவி வரை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுகின்றனர் என்றும், அண்ணா பல்கலைக்கழகம் தொடங்கி, கலைஞர் பேருந்து நிலையம் வரையில் பெண்கள் எங்குமே பாதுகாப்பாகச் செல்ல முடியாத சூழல் தமிழ்நாட்டில் நிலவுகிறது என்றும் சீமான் விமர்சித்துள்ளார்.
தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது என்பதையே தற்போதைய நிகழ்வுகள் உறுதிப்படுத்துகின்றன என்றும் சீமான் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.