அண்ணா பல்கலைக் கழக மாணவி விவகாரத்தில், அச்சுறுத்தலுக்கு ஆளான பத்திரிகையாளர்களுக்கு நீதிமன்றம் மூலம் நீதி பெற்றுக் கொடுத்த வழக்கறிஞர்களுக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.
அண்ணா பல்கலைக் கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கின் எஃப்ஐஆர் வெளியான விவகாரம் குறித்து சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணயின் போது, பத்திரிகையாளர்களை அச்சுறுத்தியதாகவும், துன்புறுத்தியதாகவும் புகார் எழுந்தது. மேலும், ஒரு சில செய்தியாளர்களின் செல்போன்களையும் பறிமுதல் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதுதொடர்பாக, சென்னை பத்திரிகையாளர் மன்றம் சார்பில், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், மூத்த வழக்கறிஞர்கள் பாலு, இளங்கோவன், ஜோதிமணி, விவேகானந்தன், அருண்குமார், சூரிய பிரகாசம் மற்றும் சிவகுமார் ஆகியோர் ஆஜராகி பத்திரிகையாளர்களின் உரிமைகளையும், நீதியையும் பெற்றுத் தந்தனர்.
இந்நிலையில், நீதி பெற்றுக் கொடுத்த வழக்கறிஞர்களுக்கு நன்றி தெரிவித்து கௌரவப்படுத்தும் வகையில் சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் பாராட்டு விழா நடைபெற்றது. அப்போது, வழக்கறிஞர்களுக்கு பத்திகையாளர்கள் மலர் மாலை மற்றும் சால்வை அணிவித்து, பாராட்டு தெரிவித்தனர்.