வேலூர் அருகே ஓடும் ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்ட 4 மாத கர்ப்பிணியின் வயிற்றில் இருந்த சிசு, உயிரிழந்துவிட்டதாக மருத்துவமனை நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவையில் இருந்து திருப்பதிக்குச் சென்ற இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலில் கடந்த 6-ம் தேதி பயணித்த 36 வயதான 4 மாத கர்ப்பிணியை, அதே ரயிலில் பயணித்த ஹேம்ராஜ் என்பவர் பாலியல் தொல்லை கொடுத்து, வேலூர் அருகேயுள்ள கே.வி.குப்பம் அருகே கீழே தள்ளிவிட்டுள்ளார்.
தலையில் பலத்த காயத்துடன் மீட்கப்பட்ட கர்ப்பிணிக்கு வேலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், அவரது வயிற்றில் இருந்த 4 மாத சிசுவுக்கு இதயத்துடிப்பு நின்றுவிட்டதால் தாயின் உடல் நலனை கருத்தில் கொண்டு, சிசுவை வயிற்றில் இருந்து அகற்ற வேண்டும் என மருத்துவமனை நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட பெண்ணும் அவரது குடும்பத்தாரும் மீளா துயரில் மூழ்கியுள்ளனர்.