பொருளாதாரம், அரசியல், சமூகம் மற்றும் நிர்வாகத்தின் அனைத்து துறைகளிலும் AI ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தி வரும் சூழலில், பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடக்கும் AI உச்சி மாநாட்டை, பிரதமர் மோடி தலைமை ஏற்று வழிநடத்துகிறார். AI உச்சி மாநாட்டின் நோக்கங்கள் என்னென்ன ? உச்சி மாநாட்டி யார்? யார் கலந்து கொள்கிறார்கள் ? என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
அமெரிக்காவும், சீனாவும் AI தொழில்நுட்பத்தில் மிகவும் முன்னேறிவிட்டன. அதற்கு அடுத்த இடங்களில், இந்தியாவும் பிரான்ஸும் உள்ளன. அதேநேரம், இங்கிலாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஜெர்மனி ஆகிய பிற நாடுகள் AI தொழில் நுட்பத்தில் வளர்ந்து வருகின்றன.
2023ம் ஆண்டில் இங்கிலாந்தின் பிளெட்ச்லி பார்க்கில், AI பாதுகாப்பு உச்சிமாநாடு நடந்தது. செயற்கை நுண்ணறிவால் மனிதகுலத்துக்கு ஏற்படும் அச்சுறுத்தல்கள் குறித்தும், அவற்றை சமாளிப்பது குறித்தும் முதல் AI உச்சி மாநாட்டில் விவாதிக்கப்பட்டன. இதில், அமெரிக்கா, சீனா, இந்தியா உள்ளிட்ட 20 நாடுகள் AI பாதுகாப்பு குறித்த பிளெட்ச்லி பிரகடனத்தில் கையெழுத்திட்டன.
இதன் தொடர்ச்சியாக, கடந்தாண்டு தென் கொரியாவில் AI உச்சி மாநாடு நடந்தது. இரண்டாவது AI உச்சி மாநாட்டில், உலகிலுள்ள 16 சிறந்த முன்னணி AI தொழில்நுட்ப நிறுவனங்கள், AI- ஐ வெளிப்படையான முறையில் உருவாக்குவதாக உறுதியளித்தன.
ஏற்கெனவே, AI தொழில்நுட்பம் சார்ந்து, சர்வதேச அரசுகளுக்கிடையே ஒருமுறையான ஒருங்கிணைப்பை உருவாக்க பிரான்ஸ் கோரிக்கை வைத்துள்ளது.
அதற்காக, சர்வ தேச நாடுகள் ஒரு AI அறக்கட்டளையை ஏற்படுத்த பிரான்ஸ் அரசு முன்மொழிந்தது. இந்நிலையில், பாரிஸ் அமைதி மன்றத்தின் ஒரு பகுதியாக இந்த ஆண்டுக்கான AI உச்சிமாநாடு, பாரிஸில் கடந்த 6 ஆம் தேதி தொடங்கியது.
செயற்கை நுண்ணறிவில் சுமார் 500 பில்லியன் அமெரிக்க டாலர்முதலீடு செய்ய அமெரிக்க முன்வந்துள்ளது. மேலும், உலக AI நிர்வாகத்தில், தன்னை நிலைநிறுத்திக் கொள்ளவும், அடுத்த ஐந்து ஆண்டுகளில் AI மேம்பாட்டுக்காக சுமார் 3 பில்லியன் அமெரிக்க டாலர்களைத் திரட்டவும் பிரான்ஸ் திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், சர்வதேச அளவில் குறிப்பாக ஐரோப்பாவில் செயற்கை நுண்ணறிவு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக AI உச்சி மாநாட்டை பிரான்ஸ் நடத்துகிறது.
பிரதமர் மோடியுடன் இணைந்து இந்த AI உச்சி மாட்டை, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் தலைமை ஏற்று வழி நடத்துகிறார். இந்த மாநாட்டிற்கு தலைமை ஏற்கவும், பிரான்ஸ் – இந்தியாவுக்கு இடையேயான இரு தரப்பு உறவை மேம்படுத்தும் நோக்கத்திலும், பிரதமர் மோடி அரசுமுறை பயணமாக பிரான்ஸ் நாட்டுக்குச் சென்றிருக்கிறார்.
பிரதமரானதில் இருந்து பிரான்ஸுக்கு பிரதமர் மோடி செல்வது இது ஆறாவது முறையாகும். கடந்த இரண்டு ஆண்டுகளில் பிரதமர் மோடியின் இரண்டாவது பிரான்ஸ் பயணம் இதுவாகும். சர்வதேச நிர்வாகம், மனிதவளத்தின் எதிர்காலம், தனிமனித தரவு மற்றும் தேசப் பாதுகாப்பு, பொது நலனுக்கான AI, மற்றும் தேச கலாச்சாரத்தில் செயற்கை நுண்ணறிவின் செயல்பாடு குறித்து பிளெட்ச்லி பார்க் மற்றும் சியோல் உச்சிமாநாடுகளின் தீர்மானங்களை முன்னெடுத்துச் செல்வதே பாரிஸ் AI உச்சி மாநாட்டின் நோக்கமாகும்.
இந்த AI உச்சி மாநாட்டில், இரண்டு நாட்கள் AI தொழில்நுட்ப மற்றும் கொள்கை விவாதங்களுக்கு அடித்தளமாக முக்கிய மாநாட்டு நடவடிக்கைகள் மீது கவனம் செலுத்தப்பட்டது. அடுத்த இரண்டு நாட்கள் AI இன் படைப்பாற்றல்,கலை மற்றும் கலாச்சாரத்தில் செயற்கை நுண்ணறிவின் தாக்கம் குறித்து விவாதிக்கப்பட்டது.
பிப்ரவரி 10ம் தேதி, சர்வதேச வணிகத் தலைவர்கள் தினத்துடன் AI உச்சிமாநாடு அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியது. இதில், உலகமெங்கும் இருந்து சுமார் 2,000 க்கும் மேற்பட்ட முன்னணி தொழில் நுட்ப நிறுவனங்களின் தலைவர்கள் கலந்து கொண்டு, AI பாதுகாப்பு பயன்பாடுகள், எழுத்தறிவு முயற்சிகள் மற்றும் உயர் மட்ட நெட்வொர்க்கிங் சார்ந்த விஷயங்கள் குறித்து கலந்துரையாடினார்கள்.
மாநாட்டின் நிறைவு நாள் நிகழ்வுகள், பாரிஸில் உள்ள கிராண்ட் பலாய்ஸில் நடைபெறுகிறது. இதில்,சீன துணைப் பிரதமர் டிங் சூசெங், ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன்,ஜெர்மன் அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸ் உட்பட பல நாட்டுத் தலைவர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள்.
AI உச்சி மாநாட்டில் அமெரிக்காவின் சார்பாக துணைத் தலைவர் ஜே.டி. வான்ஸ் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.