தமிழக வெற்றிக்கழகத்தில் குழந்தைகள் அணி அமையவிருப்பதாக அக்கட்சியின் சட்டவிதிகளில் இடம்பெற்றிருக்கும் தகவல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தவெகவின் சட்ட விதிகள் குறித்தும் அதில் இடம்பெற்றிருக்கும் விவரங்கள் குறித்தும் இந்த செய்தி தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.
2026 சட்டமன்றத் தேர்தலை இலக்காக நிர்ணயித்து தமிழக வெற்றிக்கழகம் எனும் அரசியல் கட்சியை தொடங்கியிருக்கும் நடிகர் விஜய், தன்னோட கட்சிக்கான சட்ட விதிகளை வகுத்துள்ளார். இந்திய தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பிவைக்கப்பட்ட தமிழக வெற்றிக்கழகத்தின் சட்டவிதிகள் தமிழ்ஜனம் தொலைக்காட்சிக்கு பிரத்யேகமாக கிடைத்துள்ளன.
தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் உட்பட கட்சியின் உயர்மட்ட நிர்வாகிகளின் அதிகாரங்கள் குறித்தும், அவர்களின் பணிகள் குறித்தும் முழுமையான விவரங்கள் அந்த சட்டவிதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளன.
அதோடு கட்சியின் கொள்கைகள், நோக்கங்கள், இலக்குகள் அந்தந்த சமுதாய மக்களிடம் எளிதாக சென்றடையும் நோக்கில் வழக்கறிஞர் அணி, விவசாய அணி இளைஞரணி, மகளிரணி, மாணவியரணி, திருநங்கைகள் அணி, தன்னார்வலர் அணி போன்ற 28 அணிகள் அமைக்க தவெக தலைமை திட்டமிட்டுள்ளது.
அதில் இதுவரை எந்த அரசியல் கட்சியிலும் இல்லாத ஒரு அணியாக குழந்தைகள் அணியை அமைக்க தவெக திட்டமிட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தேசியக் கட்சிகளில் தொடங்கி மாநில கட்சிகள் வரை யாருக்கும் தோன்றாத திட்டம் நடிகர் விஜய்க்கு தோன்றியிருப்பதாக விமர்சனமும் எழத் தொடங்கியுள்ளது.
18 வயதுக்குட்பட்ட குழந்தைகளை தேர்தல் பணிக்காகவோ, பிரச்சாரத்திற்காகவோ பயன்படுத்தக் கூடாது என தேர்தல் ஆணையமே உத்தரவிட்டிருக்கும் நிலையில் குழந்தைகள் அணியை எப்படி அமைக்கலாம் ? என்ற கேள்வியும் பரவலாக எழுந்துள்ளது.
தமிழகத்தில் அதிமுக மற்றும் திமுகவுக்கு மாற்றாக ஆட்சியை பிடிக்கும் நோக்கத்தில் அரசியல் கட்சியைத் தொடங்கியிருக்கும் விஜய், அந்த கட்சிகளின் சட்டவிதிகளுக்கும் மாற்றாக இருக்க வேண்டும் என்பதற்காக இதுபோன்ற அணிகளை விஜய் உருவாக்கியிருக்கிறாரோ என்ற சந்தேகம் அவரின் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
அரசியல் கட்சிகளின் வளர்ச்சிக்கு ஏற்ப அறிவார்ந்த, சிந்தனை கொண்ட பல்வேறு வல்லுநர்களை கொண்டு புதுப்புது அணிகளை உருவாக்கும் போது தவெக தலைவர் விஜய் மட்டும் குழந்தைகள் அணியை உருவாக்கியிருப்பது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இருப்பினும், இந்த குழந்தைகள் அணி எந்த நோக்கத்திற்காக அமைக்கப்பட இருக்கிறது ? அந்த அணியின் செயல்பாடுகள் எப்படி இருக்கும்? என்ற விவரங்கள் எதுவும் தவெகவின் சட்டவிதிகளில் இடம்பெறாத நிலையில், அது தொடர்பான விரிவான விளக்கத்தை கட்சித்தலைமை விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.