தைப்பூசத்தை ஒட்டி பழனி முருகன் கோயிலில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை காவடி சுமந்து சென்று சாமி தரிசனம் செய்தார்.
அண்ணா பல்கலைக் கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இது போன்ற சம்பவங்கள் தமிழகத்தில் இனி நிகழக்கூடாது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, இறைவனிடம் வேண்டி சாட்டையால் தம்மை தானே அடித்து வருத்திக் கொண்டார்.
அதைத்தொடர்ந்து, முருகனுக்கு 48 நாட்கள் விரதம் இருந்து தைப்பூசத்தையொட்டி அறுபடை வீடுகளுக்கு சென்று சாமி தரிசனம் மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்திருந்தார். அந்தவகையில் முதலாவதாக அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி பால தண்டாயுதபானி கோயிலில் சாமி தரிசனம் செய்ய அண்ணாமலை காவடி சுமந்து சென்றார். முன்னதாக திருஆவினன்குடி முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்த அவர், படிக்கட்டுகள் வழியாக காவடி சுமந்து மலை மீது குடி கொண்டுள்ள முருகனை மனமுருகி வழிபட்டார்.
இதுதொடர்பாக அவர் விடுத்தள்ள எக்ஸ் தள பதிவில், ஒரு மண்டல காலம், 48 நாட்கள் விரதம் இருந்து, தைப்பூச தினத்தன்று, அப்பன் முருகப் பெருமானை,பழனி மலையில் தரிசிக்கும் வாய்ப்பு கிடைத்ததை பெரும் பேறாகக் கருதுகிறேன். குன்றெல்லாம் குமரனுக்கே. கந்தனுக்கு அரோகரா என கூறியுள்ளார்.