மானாமதுரை அருகே பட்டியல் சமுதாய இளைஞர் மீதான தாக்குதலுக்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், ‘சமூகநீதிப் பாதுகாவலன்’ என்ற வார்த்தை ஜாலங்களோடு ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் ‘போலி திராவிட மாடல்’ அரசின் திராணியற்ற நிர்வாகத் திறனுக்கு சான்றாய், சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் நடைபெற்றுள்ள சம்பவத்திற்கு, எனது வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார்
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதியில் புல்லட் பைக் ஓட்டியதைச் சொல்லி, பட்டியல் சமுதாய இளைஞரின் கையை ஒரு சாதிவெறி கொண்ட கும்பல். வெட்டியுள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார்.
பட்டியல் சமுதாய மக்களுக்கு எதிரான வன்முறைகளின் எண்ணிக்கையானது, பொதுமக்களிடத்தில் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்துகின்ற வகையில் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.,
பட்டியல் சமுதாய மக்களுக்கு எதிராக நடைபெறுகின்ற வன்முறைகள் குறித்த ஆய்வு மேற்கொள்ளவும், அதன் மூலம் அவர்களுக்கு இருக்கிற இடர்களை களைந்திடவும், வன்கொடுமை தடுப்புச் சட்டம் 1989-ன் கீழ் அமைக்கப்பட்ட ‘விழிக்கண் மற்றும் கண்காணிப்புக் குழுவின்’ தலைவராக உள்ளவர், அரசு அதிகாரியோ அல்லது அமைச்சரோ அல்ல; முதல்வர் ஸ்டாலின் தான் என அவர் கூறியுள்ளார்.
பட்டியல் சமுதாய மக்களின் நலனுக்காக அமைக்கப்பட்ட இந்தக் குழுவின் தலைவராக இருந்துவரும் நீங்கள், எத்தனை முறை மாநில அளவிலான கூட்டங்கள் நடத்தியுள்ளீர்கள் என்று விளக்கமளிக்க முடியுமா? உங்களின் சமூகநீதி பரிபாலனைகளை தெரிந்து கொள்ள தமிழக மக்களாகிய நாங்கள் காத்துக் கொண்டிருக்கிறோம் என்றும் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
மாறாக, வேங்கை வயல் பிரச்சனையில் பாதிக்கப்பட்ட சமுதாய மக்களையே குற்றவாளியாக்கி வேடிக்கை பார்ப்பதும், தமிழ் நிலத்தை சாதியக் கொடுமைகள் நிகழும் களமாய் மாற்றிக் கொண்டிருப்பதும் தான் உங்களது சமூகநீதி சாதனைப் பட்டியல் என்றால், விரைவில் தூக்கி எறியப்படுவீர்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.
சிவகங்கை மாவட்டத்தில் இன்று நடைபெற்ற சம்பவத்தால் பாதிக்கப்பட்ட இளைஞருக்கு உகந்த நீதியும், இந்தக் கொடூரத்தில் ஈடுபட்டவர்களுக்கு தகுந்த தண்டனையும் பெற்றுத் தராவிட்டால், தமிழகம் தன் வரலாற்றில் கண்ட மிக மோசமான முதல்வர் என்ற பட்டியலில் முதலிடம் பிடிப்பீர்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என எல்.முருகன் கூறியுள்ளார்.