உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் 3ஆம் கட்ட காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி இன்று தொடங்குகிறது.
வாரணாசிக்கும், தமிழகத்திற்கும் இடையேயான பிணைப்பை புதுப்பிக்கும் வகையில், ‘காசி தமிழ் சங்கமம்’ நிகழ்ச்சி, 2022ம் ஆண்டு முதல் நடந்து வருகிறது. அதன் மூன்றாம் கட்ட நிகழ்வுகள், இன்று முதல் 24ம் தேதி வரை நடைபெறுகிறது.
உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் இன்று மதியம் 3 மணிக்கு விழா தொடங்குகிறது. உத்தரப்பிரதே முதல்வர் யோகி ஆதித்யநாத், மத்திய அமைச்சர்கள் தர்மேந்திர பிரதான், எல்.முருகன் ஆகியோர் விழாவை தொடங்கி வைக்கின்றனர்.
இந்த முறை சித்த மருத்துவம், பாரம்பரிய தமிழ் இலக்கியம், கலாசார ஒற்றுமை ஆகியவற்றுக்கு அகத்தியர் ஆற்றிய பங்களிப்பை எடுத்துக்காட்டும் விதமாக காசி தமிழ் சங்கமம் நடைபெறுகிறது.
இதில் பங்கேற்பதற்காக தமிழ்நாட்டில் இருந்து பல்வேறு துறைகளைச் சோ்ந்த சுமார் 1200 பேரை அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில், சுமார் 220 பேர் கொண்ட முதற்குழு கடந்த 13ஆம் தேதி வாரணாசிக்குப் புறப்பட்டது.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் புறப்பட்ட சிறப்பு ரயிலை ஆளுநர் ஆர்.என்.ரவி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.