காசி தமிழ் சங்கமம் மூலம் தமிழ்நாட்டிற்கும் காசிக்கும் இடையிலான தொடர்புகளை மேலும் வலுப்பெறும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பிரதமர் மோடி விடுத்துள்ள பதிவில், வாரணாசியில் 3வது காசி தமிழ் சங்கமம் நடைபெறுவது மகிழ்ச்சி அளிப்பதாகவும், பிரயாகராஜில் மகா கும்பமேளாவின் மத்தியில் நடைபெறும் இந்த நிகழ்வு முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளதாகவும் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டிற்கும் காசிக்கும் இடையே, காவேரிக்கும் கங்கைக்கும் இடையேயான நீடித்த தொடர்பு, பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது என்றும், முந்தைய இரண்டு சங்கமங்களின் போது மக்களின் மனதைத் தொடும் உணர்வுகளும் அனுபவங்களும் இந்தியாவின் பன்முக கலாச்சாரத்தின் அழகையும், மக்களிடையேயான வலுவான தொடர்புகளையும் வெளிப்படுத்தியதாகவும் அவர் கூறியுள்ளார்.
காசி தமிழ் சங்கமம் நினைவுகளைப் புதுப்பிப்பது மட்டுமல்லாமல், தமிழ்நாட்டிற்கும் காசிக்கும் இடையிலான தொடர்புகளை மேலும் வலுப்படுத்தும். மக்களின் முழு மனதுடன் பங்கேற்பது இந்த சங்கமங்களை ஏக் பாரத் ஸ்ரேஷ்ட பாரதத்தின் உணர்வின் ஒரு ஜோதியாக மாற்றியுள்ளதாகவும் கூறியுள்ளார்.
இந்த ஆண்டு, நமது பாரம்பரிய மருத்துவ முறைகளுக்கும், பாரம்பரிய தமிழ் இலக்கியங்களுக்கும் அகஸ்தியரின் குறிப்பிடத்தக்க பங்களிப்புகள் கொண்டாடப்படும் என்பதை அறிந்து மகிழ்ச்சி அடைவதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், பங்கேற்பாளர்கள் மகாகும்ப மேளாவை அனுபவிக்கவும், அயோத்தியில் உள்ள ஸ்ரீ ராமர் கோயிலுக்குச் செல்லவும் வாய்ப்பு கிடைக்கும் என்றும், அவர்கள் . தெய்வீகத்தால் ஆசீர்வதிக்கப்பட்டதாக உணருவார்கள் என்று நம்புவதாகவும பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
விக்சித் பாரதத்தை கட்டியெழுப்பும் தொலைநோக்கு பார்வையை நோக்கி நாடு முன்னேறிச் செல்லும்போது, காசி தமிழ் சங்கமம் போன்ற முயற்சிகள் நமது ஒற்றுமையை வலுப்படுத்துவதில் மிக முக்கியமானதாக மாறும் என்றும், அதே வேளையில், நமது பன்முகத்தன்மையைக் கொண்டாடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
காசிக்குச் செல்லும் தமிழக மக்கள் வாழ்நாள் முழுவதும் போற்றும் சிறந்த நினைவுகளுடன் திரும்பிச் செல்லட்டும் என்றும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.