இந்திய ரயில்வே துறை ஹைதராபாத்தை பெங்களூரு மற்றும் சென்னையுடன் இணைக்கும் அதிவேக ரயில் வழித்தடங்களை அமைக்க திட்டமிட்டுள்ளது. இதனால், பெங்களூரு சென்னை பயண நேரம் சுமார் பத்து மணி நேரம் குறையும் என்றும், ஒரு சினிமா பார்க்கும் நேரத்துக்குள் பெங்களூரு செல்லலாம் என்றும் கூறப்படுகிறது. அது பற்றி ஒரு செய்தி தொகுப்பு.
ஒரு நாடு பொருளாதார ரீதியில் வேகமாக வளர்ச்சியடைய வேண்டுமென்றால், விரைவான பயணம் செய்ய கூடிய வகையில், தரமான போக்குவரத்து வசதிகள் இருக்க வேண்டியது அவசியம். பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த 10 ஆண்டுகளில், நாடு முழுவதும் பல்வேறு தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் எக்ஸ்பிரஸ்வே சாலை பணிகளைத் திட்டமிட்டு செயல்படுத்தி வருகிறது.
மேலும், விமானப் போக்குவரத்துக்கு ஈடுகொடுக்கும் வகையில், இந்திய ரயில்வே துறையும், விரைவான, பாதுகாப்பான ரயில் பயணத்துக்கு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.அடுத்த 3 ஆண்டுகளில், 200 புதிய வந்தே பாரத் ரயில்கள், 100 அமிர்த பாரத் ரயில்கள், 50 நமோ பாரத் விரைவு ரயில் மற்றும் 17,500 பொது ஏசி அல்லாத இரயில் பெட்டிகள் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்று மத்திய ரயில்வே மற்றும் மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்திருந்தார்.
இந்த ஆண்டு பட்ஜெட்டில் ரயில்வேயின் உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்களுக்கு 4,60,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு திட்டங்கள் மூலம் இந்திய ரயில்வேயின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக பட்ஜெட்டில் 1,16,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த நிதியாண்டின் இறுதிக்குள் 1.6 பில்லியன் டன் சரக்குகளை ஏற்றிச் செல்லும் இரண்டாவது அதிக சரக்குகளை ஏற்றி செல்லும் ரயில்வேயாக இந்திய ரயில்வே மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2047ம் ஆண்டுக்குள் மணிக்கு 250 கிமீ வேகத்தில் பயணிப்பதற்கு ஏற்ற 7,000 கிமீ அதிவேக ரயில் வலையமைப்பை உருவாக்கவதே இந்தியாவின் இலக்காகும்.
குறிப்பாக, இந்த நிதியாண்டின் இறுதிக்குள் இந்திய ரயில்வே 100 சதவீத மின்மயமாக்கலை எட்டும் என்று கூறப்படுகிறது. இந்த சூழலில், பெங்களூரு-சென்னை நகரங்களுக்கும் இடையே அதிவேக ரயில் வழி தடங்கள் அமைக்க இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது.
இந்த ரயில்கள் மணிக்கு 320 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் என்று கூறப்பட்டுள்ளது. பயண நேரத்தை கிட்டத்தட்ட 10 மணிநேரம் குறைக்கும் என்பதால் இந்த திட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகிறது. திட்டமிடப்பட்ட ஹைதராபாத்-சென்னை அதிவேக ரயில் பாதை 705 கிலோ மீட்டர் தூரத்தை உள்ளடக்கியதாகும். அதே நேரத்தில் ஹைதராபாத்-பெங்களூரு வழி பாதை பாதை 626 கிலோமீட்டர் நீளமானதாகும்.
இதுவரை, நகரங்களுக்கு இடையேயான விமானப் பயணம் சுமார் 1 மணி நேரம் 15 நிமிடங்கள் ஆகும் என்றாலும், விமான நிலைய பாதுகாப்பு மற்றும் நகரத்துக்குள் செல்லும் பயண நேரம் என மொத்த பயண நேரம் இது கிட்டத்தட்ட 3 மணிநேரம் ஆகிறது. பயணிகள் பெங்களூருவை சுமார் இரண்டு மணி நேரத்தில் அடையவும், சென்னையை இரண்டு மணி நேரம் 20 நிமிடங்களில் அடையவும் இந்த அதிவேக இரயில் வழித்தடங்கள் உதவும் என்று அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கிறது.
அரசுக்குச் சொந்தமான ஆலோசனை நிறுவனமான RITES லிமிடெட் இறுதி இட ஆய்வை நடத்துவதற்காக டெண்டர்களை வெளியிட்டுள்ளது. சீரமைப்பை வடிவமைத்தல், ஒட்டுமொத்த செலவுகளை மதிப்பிடுதல் மற்றும் திட்டமிடப்பட்ட பயணிகள் போக்குவரத்தை மதிப்பிடும் ஒரு விரிவான திட்ட அறிக்கை (DPR) தயாரிக்கப் படும் என்றும் கூறப்படுகிறது.
இதுவரை இந்த ஆய்வு மற்றும் மதிப்பீட்டிற்கான மதிப்பிடப்பட்ட செலவிற்கு 33 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வந்தே பாரத் இரயில்கள் , சரக்கு இரயில்கள் மற்றும் பயணிகள் இரயில்கள் இரண்டையும் ஏற்றுக்கொள்ளும் பாரம்பரிய ரயில் பாதைகளைப் போலல்லாமல், இந்த புதிய வழித்தடங்கள் அதிவேக ரயில்களுக்கு மட்டுமே ஒதுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த ரயில்கள் மும்பை-அகமதாபாத் புல்லட் ரயில் திட்டத்தைப் போன்ற பிரத்யேக ரயில் பாதைகளில் இயக்க வடிவமைக்கப்பட்டுள்ளன. எதிர்கால விரிவாக்கத்துக்கு ஏற்ப, இந்த வழித்தடங்களை பாதைகளை உருவாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த வழித்தடங்கள் ஆரம்பத்தில் மணிக்கு 320 கிமீ வேகத்தில் இயக்கப்படும் என்று கூறப்பட்டாலும், அவை மணிக்கு 350 கிலோமீட்டர் வேகத்தை கையாளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த வழித்தடங்கள் முடிவடைய 15 ஆண்டுகள் ஆகும்.
வழக்கமான விமான நிலைய நடைமுறைகள் இல்லாமல் தடையற்ற சுகமான பயண அனுபவத்தை வழங்குவதோடு மொத்த பயண நேரத்தையும் குறைப்பதே இந்த திட்டத்தின் நோக்கமாகும்.