நாட்டில் பொறுப்புமிக்க இந்து சமூகத்தை கட்டமைப்பதே ஆர்எஸ்எஸ் அமைப்பின் நோக்கம் என அந்த அமைப்பின் தலைவர் மோகன்பகவத் தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலம் பர்தாமனில் ஆர்.எஸ்.எஸ் நிர்வாகிகளின் மாநாட்டில் ராஷ்ட்ரிய சுயம்சேவக் சங்க தலைவர் மோகன் பகவத் கலந்து கொண்டார்.
நிகழ்வில் உரையாற்றிய அவர், இந்து அமைப்புகளில் மட்டும் ஏன் இவ்வளவு கவனம் செலுத்த வேண்டும் என சிலர் கேட்பதாகவும், நாட்டின் பொறுப்பு மிக்க சமூகம் இந்து சமூகம் என்பதே தனது பதில் என்று கூறினார்.
இந்தியாவின் வாரிசுகள் இந்துக்கள் என்பதால் இந்துக்களை ஒன்றிணைக்க விரும்புகிறோம் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்தியாவிற்கு ஒரு இயல்பு உண்டு என்றும், ஆனால் சமூகத்தின் ஒரு பகுதியினரால் அனைத்து பண்புகளுடனும் வாழ முடியவில்லை என்றும், எனவே அவர்கள் ஒரு தனி நாட்டை உருவாக்கியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
உலகின் பன்முகத்தன்மையை ஏற்றுக்கொண்டு இந்துக்கள் வாழ்வதாகவும், பன்முகத்தன்மையில் ஒற்றுமை என்பதை இந்துக்கள் புரிந்துகொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த பண்புகள் இந்தியாவை வரையறுக்கின்றன என்றும், இந்த பண்புகளைப் பின்பற்றுபவர்கள் இந்துக்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.இது நாட்டின் பன்முகத்தன்மையையும் ஒன்றாக வைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
யாரையும் காயப்படுத்தும் விஷயங்களை செய்ய மாட்டோம் என்றும், ஆட்சியாளர்கள், நிர்வாகிகள் மற்றும் பெரிய மனிதர்கள் தங்கள் வேலையைச் செய்வதாகவும், நாட்டின் வேலையை சமூகம் செய்ய முன்வர வேண்டும், என்றும் மோகன் பகவத் கேட்டுக்கொண்டார்.