விண்கற்களால் பூமிக்கு ஆபத்து இருக்கிறது என தொடர்ந்து விஞ்ஞானிகள் எச்சரித்து வருகின்றனர்.அந்த வகையில்,வரும் 2032 ஆம் ஆண்டில் YR 4 என்ற விண்கல் பூமியைத் தாக்குவதற்கு வாய்ப்புள்ளதாக நாசா அறிவித்துள்ளது. எந்த நாடுகளை இந்த விண்கல் தாக்கும்? அதன் பாதிப்புக்கள் எப்படி இருக்கும் ? என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
சர்வதேச அளவில், பல்வேறு விண்வெளி ஆய்வு மையங்கள் விண்கற்களைக் கண்டுபிடித்து ஆய்வு செய்து வருகின்றன. தொடர்ந்து கண்காணித்தும் வருகின்றன. கடந்த ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட விண்கல் தான் YR4. இது பூமிக்கு மிக நெருக்கமாக இருக்கிறது என்பதையும் கண்டுபிடித்துள்ளனர்.
YR 4 என்ற விண்கல் 130 முதல் 300 அடி வரை குறுக்களவு கொண்டதாகும். மேலும் சுமார் 40 முதல் 100 மீட்டர் அகலம் கொண்டதாகும். மணிக்கு 61,200 கிலோமீட்டர் வேகத்தில் இந்த விண்கல் நகர்ந்து கொண்டிருக்கிறது.
இந்த விண்கல் பூமியைத் தாக்க சுமார் 2 சதவீதம் வாய்ப்பு இருப்பதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 2 சதவீத தாக்கும் வாய்ப்பு உண்மையாகிவிட்டால், இந்த விண்கல் பூமியில் எங்காவது மோதும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விண்கல் மோதுவதால், பூமி அழிந்து விடாது என்றும், மனித குலத்துக்கு எந்த ஆபத்தும் இல்லை என்றும் கூறியுள்ளனர்.
பூமியில் ஏதாவது ஒரு நாட்டில், ஏதாவது ஒரு முக்கிய நகரில் விழும் போது, மிகப் பெரிய அழிவை ஏற்படுத்தும் என்றும் எச்சரித்துள்ளனர். இது எங்கு நடந்தாலும் சுமார் 50 கிலோ மீட்டர் சுற்றளவுக்கும் மேல் பெரிய அழிவை ஏற்படுத்தக்கூடும் என்று தெரிவித்துள்ளனர்.
பூமியைத் தாக்கும் இடத்தில் 10 கிலோமீட்டர் அகலத்துக்கு ஒரு பெரிய பள்ளத்தை உருவாக்கும். இந்த விண் கல் விழுந்த இடத்தை சுற்றி 10 ரிக்டர் அளவுக்கும் மேல் நிலநடுக்கம் ஏற்படும். ஒரு கட்டிடம் கூட மிஞ்சாது. இந்த தாக்கத்தால் ஏற்படும் பெரும் புகையானது வானத்தையே மறைக்கும். இதனால் சூரிய ஒளி கூட பூமிக்குள் வரமுடியாது. லட்சக்கணக்கானோர் உயிரிழப்பார்கள். கோடிக்கணக்கானோர் படுகாயமடைவார்கள். பூமியின் பொருளாதாரம் கடும் பாதிப்புக்கு உள்ளாகும் என்றும் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
பூமியின் மீது விண்கல் மோதும்போது ஏற்படும் சக்தி, 8 மெகாடன் TNT அளவுக்கும் அதிகமாக இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இது ஜப்பானின் ஹிரோஷிமாவைத் தாக்கிய அணுகுண்டைப் போல 500 மடங்கு சக்தி வாய்ந்ததாகும்.
இவையெல்லாம் விண்கல்லின் அளவு, நகரும் வேகம் ஆகியவற்றைப் பொறுத்தது என்று கூறும் விஞ்ஞானிகள், பூமியிலிருந்து விண்கல்லின் தூரம் இன்னும் துல்லியமாக தெரியவில்லை என்கிறார்கள். விண்கல் பற்றிய கூடுதல் தரவுகளைச் சேகரித்து அதன் பாதையைச் செம்மைப்படுத்தும்போது, பூமியைத் தாக்கும் வாய்ப்புகள் குறையலாம் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
தென் அமெரிக்கா, தெற்காசியா, ஆப்பிரிக்கா, அரேபிய கடல் மற்றும் பசிபிக் பெருங்கடல், ஆகிய பகுதிகளை இந்த விண்கல் தாக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், எத்தியோப்பியா, சூடான், நைஜீரியா, வெனிசுலா, கொலம்பியா மற்றும் ஈக்வடார் ஆகிய நாடுகளில் பாதிப்பு ஏற்படலாம் என்று கூறப்படுகிறது.
இந்த விண்கல் குறித்த கூடுதல் தரவுகளைச் சேகரித்து, அதன் பாதையைச் செம்மைப்படுத்தும்போது, பூமியைத் தாக்குவதற்கான வாய்ப்புகள் இல்லாமலே போகலாம் என்றும் விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
எப்போதுமே பூமிக்கு நெருக்கமாக பல விண்கற்கள் இருக்கின்றன. அவை எல்லாமே பூமியைத் தாக்குவதில்லை. குறிப்பிட்ட சில விண்கற்கள் மட்டுமே ஆபத்தானவையாக வகைப் படுத்தப் பட்டிருக்கிறது. அதாவது 0 என்கிற அளவில் வைக்கப்பட்டிருக்கும் கற்கள் பூமியை தாக்குவதற்கு வாய்ப்பு எப்போதுமே கிடையாது. இதே 10 என்கிற அளவில் வைக்கப்பட்டிருக்கும் விண்கல் , நிச்சயம் பூமியை தாக்கும். இந்த அளவீட்டில் YR 4 எனும் விண்கல் 3வது இடத்தில் வைக்கப்பட்டிருக்கிறது.
தற்சமயம் இந்த விண்கல் பூமியை விட்டு வேகமாக விலகி சென்றுக்கொண்டிருக்கிறது என்றும் மீண்டும் 2028ஆம் ஆண்டு பூமிக்கு நெருக்கமாக வரும் என்று கூறப்படுகிறது.
அதற்கு பிறகு 2032 ஆம் ஆண்டு, மீண்டும் பூமிக்கு அருகில் வரும்போதுதான் பூமியை தாக்க வாய்ப்பு இருக்கிறது என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.