சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மத்திய அரசு அறிமுகம் செய்துள்ள டிஜிட்டல் லாக்கர் வசதி, மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதுபற்றிய ஒரு செய்தி தொகுப்பை தற்போது காணலாம்.
சென்னையின் முக்கிய ரயில் நிலையமான சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து நாள்தோறும், நாட்டின் பல்வேறு நகரங்களுக்கும், தமிழகத்தின் மேற்கு, மத்திய மற்றும் தென் மாவட்டங்களுக்கும் 150-க்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்படுகின்றன. அதேபோல, அந்தந்த பகுதிகளில் இருந்தும் சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு பல ரயில்கள் வந்தடைகின்றன.
இந்த ரயில்கள் மூலம் வெளி மாவட்ட மற்றும் வெளி மாநில சுற்றுலா பயணிகள் உட்பட சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இந்த பயணிகள் அனைவரும் தங்கள் உடமைகளை செல்லும் இடங்களுக்கெல்லாம் தூக்கிச் செல்லும் அவல நிலை இருந்து வந்த நிலையில், அதற்கு நிரந்தர தீர்வுகாணும் விதமாகவும், பயணிகளின் வசதிக்காகவும் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் டிஜிட்டல் லாக்கர் அறை திறந்து வைக்கப்பட்டுள்ளது.
ரயில் நிலையத்தின் 2-வது நடைமேடையின் நுழைவு வாயிலில் இந்த அறை அமைக்கப்பட்டுள்ளது. தனியார் நிறுவனத்திடம் 3 ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் ஒப்படைக்கப்பட்டுள்ள இந்த டிஜிட்டல் லாக்கர் அறையில், நடுத்தர லாக்கர்கள், பெரிய லாக்கர்கள் மற்றும் மிகப்பெரிய லாக்கர்கள் என 3 வகையான லாக்கர் சேவை வழங்கப்படுகிறது.
நடுத்தர வகை லாக்கருக்கு 3 மணி நேரத்திற்கு 40 ரூபாயும், 6 மணி நேரத்திற்கு 60 ரூபாயும், 9 மணி நேரத்திற்கு 90 ரூபாயும், ஒரு நாளைக்கு 120 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. பெரிய வகை லாக்கருக்கு 3 மணி நேரத்திற்கு 50 ரூபாயும், 6 மணி நேரத்திற்கு 80 ரூபாயும், 9 மணி நேரத்திற்கு 120 ரூபாயும், ஒரு நாளைக்கு 160 ரூபாயும் கட்டணம் பெறப்படுகிறது.
அதேபோல, மிகப்பெரிய வகை லாக்கர்களுக்கு 3 மணி நேரத்திற்கு 60 ரூபாயும், 6 மணி நேரத்திற்கு 100 ரூபாயும், 9 மணி நேரத்திற்கு 150 ரூபாயும், ஒரு நாளைக்கு 200 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது.
டிஜிட்டல் லாக்கர்கள் அனைத்தும் ஸ்மார்ட் போனை பயன்படுத்தி இயக்கக்கூடியது எனவும், QR குறியீட்டை பயணிகள் தங்கள் செல்போனில் ஸ்கேன் செய்து, தேவையான லாக்கரை தேர்வு செய்து UPI மூலம் கட்டண தொகையை செலுத்தி, அதில் அளிக்கப்படும் ரகசிய எண் மூலம் லாக்கர் சேவையை பயன்படுத்திக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டணம் செலுத்திய நேரத்தை விட அதிக நேரம் டிஜிட்டல் லாக்கரை பயன்படுத்தினாலும், அதுபற்றிய தகவல்கள் டிஜிட்டல் லாக்கர் சேவை மூலம் பயணிகளுக்கு தெரிவிக்கப்படுவதால், கூடுதல் தொகை செலுத்தி உடைமைகளை பாதுகாப்பாக வைத்திருக்க உதவியாக உள்ளதென பயணிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.