இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக இந்தியா வந்துள்ள கத்தார் அமீர் ஷேக் தமீம் பின் ஹமத் அல்-தானியை விமான நிலையத்துக்கு நேரில் சென்று பிரதமர் மோடி வரவேற்றுள்ளார். இந்தியா-கத்தார் உறவுகள் ஏன் முக்கியமானதாக உள்ளது ? கத்தார் அமீரின் வருகையால் இந்தியாவுக்கு என்ன லாபம் ? என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
மிகச்சிறிய அரபு நாடான கத்தாருக்கும் இந்தியாவுக்கும் இடையிலான அரசு உறவுகள் 70 களில் தொடங்கியது. 1973 ஆம் ஆண்டு ஜனவரியில் இந்தியாவில் உள்ள தனது தூதரகத்துக்கான முதல் பொறுப்பாளர்களைக் கத்தார் அரசு நியமித்தது. அடுத்த ஆண்டே இந்தியாவுக்கான தனது முதல் தூதரைக் கத்தார் அரசு அறிவித்தது.
1940ம் ஆண்டு கத்தார் தனது நாட்டின் துகான் நகரில் எண்ணெய் இருப்பைக் கண்டுபிடித்தது. இருபது ஆண்டுகளுக்குப் பிறகு, மற்றொரு எண்ணெய் இருப்பையும் கண்டுபிடித்தது. அதன்பிறகு கத்தாரின் பொருளாதாரம் வேகமாக வளரத் தொடங்கியது. கத்தாரில் பொருளாதார வளர்ச்சியில், வெளிநாட்டிலிருந்து அழைத்து வரப்பட்ட தொழிலாளர்களின் பங்கு மிக முக்கியமானது.
1990ம் ஆண்டில் கத்தாரில் வாழும் இந்தியர்களின் எண்ணிக்கை சுமார் 50 லட்சமாகும். கத்தாரில் மொத்த மக்கள்தொகையில் இது மூன்றில் ஒரு பங்காகும். இன்றைய நிலையில் சுமார் 8.4 லட்சம் இந்தியர்கள் கத்தாரில் வாழ்கின்றனர். மருத்துவம்,பொறியியல்,கல்வி, நிதி,வங்கி,வணிகம் மற்றும் ஊடகம் உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் இந்தியர்கள் பணிசெய்து வருகின்றனர். கத்தாரில் வாழும் பெரும்பாலான இந்தியர்கள் தொழிலாளர்களாக உள்ளனர். கூடுதலாக, சிறிய மற்றும் பெரிய நிறுவனங்கள் என்று கத்தாரில் சுமார் 15,000 இந்திய நிறுவனங்கள் செயல் பட்டுவருகின்றன. இந்த நிறுவனங்களின் ஒட்டுமொத்த முதலீட்டு தொகை 450 மில்லியன் அமெரிக்க டாலர் ஆகும்.
பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரை, இந்தியா கத்தார் உறவுகள் ஒரு தேக்கநிலையில் தான் இருந்தது. கடந்த 2016ம் ஆண்டு ஜூன் மாதம், பிரதமர் மோடி முதல்முறையாக கத்தார் நாட்டுக்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டார்.
இதன் பிறகு, கத்தாருக்கும் இந்தியாவுக்கும் இடையிலான வர்த்தகமும் அதிகரித்தது. கத்தார் இந்தியாவிலிருந்து தானியங்கள், இயந்திரங்கள் மற்றும் மின்சாரப் பொருட்களை இறக்குமதி செய்கிறது. கத்தாரிடம் இருந்து இந்தியா எண்ணெய் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவை (எல்என்ஜி) வாங்குகிறது.
கடந்த பிப்ரவரி மாதம் கத்தார் சிறையில் இருந்து எட்டு முன்னாள் இந்திய கடற்படை வீரர்களை விடுவிக்கப் பட்ட பிறகு, பிரதமர் மோடி இரண்டாவது முறையாக கத்தார் பயணம் மேற்கொண்டார்.
இது தவிர, 2019 ஆண்டு,செப்டம்பரில், ஐநா பொதுச் சபை கூட்டத்திலும், 2023 ஆம் ஆண்டு டிசம்பரில் துபாயில் நடைபெற்ற காலநிலை மாநாட்டிலும் கத்தார் அமீர் தமீம் பின் ஹமத் அல் தானியைப் பிரதமர் மோடி சந்தித்து பேச்சுவார்த்தைகள் நடத்தியுள்ளார்.
இந்திய துறைமுகங்களை கத்தாருடன் இணைக்கும் நேரடி கப்பல் பாதைகள் திறக்கப்பட்டதன் மூலம் இருநாடுகளுக்குமான வர்த்தகம் எளிதாக்கப்பட்டது. இந்தியாவிற்கும் கத்தாருக்கும் இடையிலான வர்த்தகம் மற்றும் எரிசக்தி உறவுகள் அதிகரித்து வருகின்றன.
ஆண்டுதோறும் 7.7 கோடி டன் எரிவாயுவை கத்தார் உற்பத்தி செய்கிறது. இதனை 2027-ஆம் ஆண்டுக்குள் 12.6 மில்லியன் டன்கள் ஆக உயர்த்த நினைக்கிறது. இதன்மூலம் ஆசியா மற்றும் ஐரோப்பாவில், தன் பிடியை வலிமைபடுத்த கத்தார் செயல்படுகிறது. ஆசியா மற்றும் ஐரோப்பாவில் எரிவாயு ஏற்றுமதியில் அமெரிக்கா கால் பதிக்க தீவிரம் காட்டி வருகிறது.
இந்நிலையில், கத்தாருக்கு இந்தியா மிகவும் முக்கியமானதாக உள்ளது. இந்தியாவுக்கான மிகப்பெரிய எல்என்ஜி விநியோகஸ்தராக கத்தார் உள்ளது. இந்தியாவின் உலகளாவிய எல்என்ஜி இறக்குமதியில் 48 சதவீதத்துக்கும் அதிகமான எல்என்ஜி கத்தாரில் இருந்து வருகிறது.
சீனா மற்றும் ஜப்பானுக்கு அடுத்தபடியாக கத்தாரின் மூன்றாவது பெரிய எரிவாயு வாடிக்கையாளராக இந்தியா உள்ளது. இறக்குமதியைப் பொறுத்தவரை, சீனா மற்றும் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது.
ஆற்றல் நுகரும் உலக நாடுகளில், இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது.. 2070-ஆம் ஆண்டுக்குள் இந்தியா நிகர பூஜ்ஜிய கார்பன் உமிழ்வை இலக்காகக் கொண்டுள்ளது. இதை அடைவதற்கு இயற்கை எரிவாயு இந்தியாவுக்குத் தேவைப்படுகிறது.
2030-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் இயற்கை எரிவாயு பயன்பாட்டின் பங்கை 6.3 சதவீதத்தில் இருந்து 15 சதவீதம் அதிகரிக்க இந்தியா நடவடிக்கை எடுத்து வருகிறது. டீசல் மற்றும் பெட்ரோலை விட இயற்கை எரிவாயு தூய்மையானதாகக் கருதப்படுகிறது. இது கச்சா எண்ணெயை விட மலிவானது.
கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு இறக்குமதியைச் இந்தியா சார்ந்துள்ளது. அதன் கச்சா எண்ணெயில் தோராயமாக 85 சதவீதத்தை இறக்குமதி செய்கிறது. அதேசமயம், இயற்கை எரிவாயு மிகவும் முக்கியமானதாகவும், நாட்டின் ஆற்றல் தேவைகளை மாற்றுவதற்கு ஏற்றதாகவும் கருதப்படுகிறது.
இந்தச் சூழலில் எரிவாயுவை இறக்குமதி செய்ய 6.5 லட்சம் கோடி இந்திய ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தத்தில்,இந்தியாவும் கத்தாரும் அடுத்த 20 ஆண்டுகளுக்கு கையெழுத்திட்டுள்ளன.
அதாவது, 2048-ஆம் ஆண்டு வரை கத்தாரிடம் இருந்து திரவ இயற்கை எரிவாயுவை வாங்குவதற்கான ஒப்பந்தம் இதுவாகும்.
இந்தியாவின் மிகப்பெரிய எல்.என்.ஜி இறக்குமதி நிறுவனமான பெட்ரோநெட் எல்.என்.ஜி லிமிட்டெட் (Petronet LNG Limited – PLL), கத்தாரின் அரசு நிறுவனமான ‘கத்தார் எனெர்ஜி’யுடன் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
இந்த ஒப்பந்தத்தின் கீழ், கத்தார் ஒவ்வொரு ஆண்டும் 75 லட்சம் டன் எரிவாயுவை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யும். அந்த எரிவாயு, மின்சார உற்பத்தி, உரத் தயாரிப்பு, மற்றும் சி.என்.ஜி.யாக மாற்றப்பயன்படும்.
ஏற்கெனவே, 2022-23-ஆம் ஆண்டில் இந்தியா சுமார் 2 கோடி டன் எல்.என்.ஜி.யை இறக்குமதி செய்துள்ளது. இதில் சுமார் 54 சதவீதம் அதாவது சுமார் 1.1 கோடி டன்கள் கத்தாரில் இருந்து இறக்குமதி செய்யப் பட்டுள்ளது.
அதே நிதியாண்டில், இந்தியா கத்தாரில் இருந்து மொத்தம் சுமார் 1.3 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான எரிவாயுவை இறக்குமதி செய்துள்ளது. இதில் எல்என்ஜி இறக்குமதி சுமார் 69,200 கோடி ரூபாய் ஆகும். இது மொத்த இறக்குமதியில் 49.5 சதவீதம் ஆகும்.
இந்நிலையில், இந்தியா வந்துள்ள கத்தார் அமீரின் இந்திய வருகை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
இந்தியாவும் கத்தாரும் நட்பு, நம்பிக்கை மற்றும் பரஸ்பர மரியாதை ஆகியவற்றின் ஆழமான வேரூன்றிய வரலாற்று உறவுகளைக் கொண்டுள்ளன.
வர்த்தகம், முதலீடு, எரிசக்தி, தொழில்நுட்பம், கலாச்சாரம் மற்றும் பாதுகாப்பு ஆகிய துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் தொடர்ந்து வலிமை பெற்று வருகின்றன.