மத்திய அமைச்ர் அமித்ஷா கூறிய வியூகங்களை ஏற்காததற்கான பலனை இன்று எடப்பாடி பழனிசாமி அனுபவித்து வருவதாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர், பேரிடர் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிதி ஒதுக்குவதற்கு என ஒரு அளவுகோல் மத்திய அரசிடம் இருக்கிறது எனவும், அந்த அளவுகோலின் படி எந்த மாநிலமாக இருந்தாலும் பா.ஜ.க நிதி ஒதுக்கும் என தெரிவித்தார்.
விரக்தியில் இருக்கிறார் ஓபிஎஸ் என அதிமுக முன்னாள் அமைச்சர் உதயகுமாரின் விமர்சனம் தொடர்பான கேள்விக்கு, உதயகுமாருக்கு பதில் சொல்ல தேவையில்லை என்றார். அவர் பேசுகின்ற மொழி எந்த மாதிரியான மொழி என்பது மக்களுக்குத் தெரியும் என்றும் அவர் கூறினார்.
மேலும் கொங்குநாட்டில் இருப்பவர்கள் எல்லாம் கொங்கு நாட்டின் தங்கங்கள் என தெரிவித்த அவர்,நீண்ட காலம் கட்சிக்காக நானும் செங்கடே்டையனும் இணைந்து பணியாற்றி இருக்கிறோம் எனவும், கட்சிக்காக எதையும் எதிர்பார்க்காமல் உழைக்க கூடியவர் செங்கோட்டையன் என தெரிவித்தார். அதிமுக இணைய வேண்டும் என்பது அனைவரின் கருத்தாக உள்ளதாகவும் அவர் கூறினார்.
செங்கோட்டையனை சந்திக்க வாய்ப்பு இருக்கிறதா? என்ற கேள்விக்கு , அதிமுக இணைய வேண்டும் என்ற ஒத்த கருத்துடன் இருப்பவர்களுடன் போனில் பேசிக் கொண்டு இருப்பதாக தெரிவித்தார்.
செங்கோட்டையனிடம் பேசிக்கொண்டீர்களா என்ற கேள்விக்கு ,எப்படியாவது சண்டை ஏற்படுத்தி செங்கோட்னையன் மீது நடவடிக்கை எடுக்க வைக்க வேண்டும், அதுதானே உங்கள் எண்ணம் என்றும் ஓபிஎஸ் தெரிவித்தார்.