உக்ரைன் போர் தொடர்பாக, சவூதி அரேபியாவின் ரியாத் நகரில், ரஷ்யாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையில், அமைதியை ஏற்படுத்துவது தொடர்பான பேச்சுவார்த்தையை நடத்த உயர்நிலைக் குழு ஒன்றை அமைக்க இரு தரப்பினரும் ஒப்புக் கொண்டுள்ளனர். அமைதிப் பேச்சுவார்த்தையில் என்ன நடந்தது? உக்ரைன் போர் எப்போது முடிவுக்கு வரும் ? என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
உக்ரைன் போர் தொடங்கி மூன்றாவது ஆண்டு நிறைவடைய போகிறது. கடந்த மாதம் அமெரிக்க அதிபராக பதவியேற்ற ட்ரம்ப், உக்ரைன் போர் விஷயத்தில், முன்னாள் அதிபர் ஜோ பைடன் எடுத்த கொள்கை முடிவிலிருந்து, முற்றிலும் மாறுபட்ட நிலைப்பாட்டை எடுத்துள்ளார்.
உக்ரைன் மீது ராணுவ நடவ்டிக்கையைத் தொடங்கிய ரஷ்யாவைச் சர்வதேச அரங்கில் தனிப்படுத்தும் நடவடிக்கையை ஜோ பைடன் தீவிரப் படுத்தினார். கைப்பற்றிய உக்ரைன் பகுதிகளை, மீண்டும் உக்ரைன் வசம் ஒப்படைக்காத வரை ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை இல்லை என்பதில் ஜோ பைடன் உறுதியாக இருந்தார்.
கடந்த வாரம், ரஷ்ய அதிபர் புதின் மற்றும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் தனித் தனியாக தொலைபேசியில் பேசிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப், பேச்சுவார்த்தைக்கு ரஷ்யா தயாராக இருப்பதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். மேலும், உக்ரைன் போர் தொடர்பான ரஷ்யா, அமெரிக்கா பேச்சுவார்த்தை சவூதி அரேபியாவில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
போர் குற்றங்கள் புரிந்ததாக குற்றம் சாட்டப்பட்டு, 2023-ஆம் ஆண்டு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ரஷ்ய அதிபர் புதினை கைது செய்ய ஆணை பிறப்பித்துள்ளது. சவூதி அரேபியா சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் ஒரு அங்கமாக இல்லை என்பதால் புதின் நாட்டுக்கு அச்சமின்றி செல்லலாம். ஏற்கெனவே ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே கைதிகளை விடுதலை செய்வதற்கான பேச்சுவார்த்தையை நடத்திய நாடுகளில் சவூதி அரேபியாவும் முக்கிய பங்காற்றியது. எனவே தான், போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்கு சவூதி அரேபியா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
அதன் படி, அமெரிக்காவும், ரஷ்யாவும் சவூதி அரேபியாவில் அமைதிப் பேச்சுவார்த்தையை நடத்தியுள்ளன. அமெரிக்க தரப்பில், அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோ, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக் வால்ட்ஸ் மற்றும் மத்திய கிழக்கு மண்டலத்துக்கான சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்காஃப் ஆகியோர் பங்கேற்றனர்.
ரஷ்யா தரப்பில், அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் செர்கே லாவ்ரோவ் மற்றும் ரஷ்ய வெளியுறவுக் கொள்கை ஆலோசகர் யூரி உஷாகோவ் ஆகியோர் இருந்தனர்.
இந்த அமைதிப் பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் மற்றும் பிற ஐரோப்பிய நாடுகள் அழைக்கப்படவில்லை.
உக்ரைன் இடம் பெறாத எந்தவொரு அமைதிப் பேச்சுவார்த்தை ஒப்பந்தத்தையும் ஏற்கப் போவதில்லை என்று என்று அதிபர் ஜெலன்ஸ்கி திட்டவட்டமாக கூறியிருக்கிறார்.
இந்நிலையில், அமெரிக்கா – ரஷ்யா இடையே 3 விஷயங்கள் ஒப்புக்கொள்ளப்பட்டதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கே லாவ்ரோவ் தெரிவித்துள்ளார்.
முதலாவதாக, இரு நாடுகளும் விரைவில் தூதர்களை நியமிக்கும். இரு நாட்டு தூதரகங்களுக்கான வங்கி பரிமாற்றங்கள் மீதான கட்டுப்பாடுகள் மற்றும் அரசு ரீதியிலான பணிகளுக்கு இருந்த தடைகள் நீக்கப்படும்.
இரண்டாவதாக, உக்ரைன் உடனான போர் நிறுத்த ஒப்பந்தத்துக்குத் தேவையான நடவடிக்கைகள் தொடங்கப்படும். இதற்காக அமெரிக்கா தனது பிரதிநிதிகளை முதலில் நியமிக்கும். அதன் பிறகே ரஷ்யா பிரதிநிதிகளை நியமிக்கும். மூன்றாவதாக, பல்வேறு துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையே முழு ஒத்துழைப்பைத் தொடங்கவும், மேம்படுத்தவும் தேவையான சூழல் உருவாக்கப்படும்.
நேட்டோ உறுப்பினராக உக்ரைன் இணைவது ரஷ்யாவுக்கு நேரடி அச்சுறுத்தலாக இருக்கும் என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கே லாவ்ரோவ் விவரித்துள்ளார். ரஷ்யா மீதான தடைகள் குறித்து, அனைத்து தரப்பினரும் விட்டுக்கொடுத்து செல்ல வேண்டும் என்று கூறியுள்ள அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோ, சில காலத்துக்கு பின் ஐரோப்பாவும் இந்தப் பேச்சுவார்த்தைகளில் இணைய வேண்டியிருக்கும் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.
இந்நிலையில், ஐரோப்பாவை அமெரிக்கா ஆதரித்த பழைய நாட்கள் முடிந்துவிட்டன என்றும், ரஷ்யாவுக்கு எதிராக பாதுகாத்துக் கொள்ள “ஐரோப்பாவின் ராணுவம்” ஒன்றைப் புதிதாக உருவாக்க வேண்டும் என்று ஜெலன்ஸ்கி கோரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த ஆண்டு மே மாதம் ஜெலன்ஸ்கியின் அதிபர் பதவிக்காலம் முடிவடைந்து விட்டதால், உக்ரைன் அதிபராக ஜெலன்ஸ்கி சட்டப்பூர்வமாக நீடிக்கிறாரா என்பதே கேள்விக்குறியாக உள்ளது.
ஐரோப்பிய நாடுகளின் பங்களிப்பின்றி அமைதிப் பேச்சுவார்த்தைகளை அமெரிக்காவும் ரஷ்யாவும் முன்னெடுத்து செல்கின்றன. இதனால், உக்ரைன் குறித்த முக்கியமான முடிவுகளில் ஐரோப்பிய நாடுகள் ஓரங்கட்டப்படுகின்றன.
இந்தச் சிக்கலை எதிர்கொள்ள, பாரிஸில்,அவசர உச்சிமாநாட்டை ஐரோப்பிய நாடுகள் கூட்டியுள்ளன. இதில்,பிரான்ஸ், பிரிட்டன், ஜெர்மனி, போலந்து, இத்தாலி, ஸ்பெயின், டென்மார்க் ஆகிய நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
இந்தப் பேச்சுவார்த்தைகளின் முடிவுகளால், வரும் ஆண்டுகளில் ஐரோப்பாவின் பாதுகாப்பு கட்டமைப்பு மாற்றியமைக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.