மத்திய அரசின் மும்மொழிக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் திமுக உட்பட பல்வேறு அரசியல் கட்சியினர் நடத்தும் பள்ளிகளில் மும்மொழிக் கொள்கை கடைபிடிக்கப்படுவது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. தேர்தலுக்கு முன்பும் பின்பும் இரட்டை நிலைப்பாட்டைக் கொண்டிருக்கும் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சித்தலைவர்களின் கபட நாடகம் பொதுமக்கள் மத்தியில் அம்பலமாகியிருக்கிறது.
தேசியக் கல்விக் கொள்கையின் அடிப்படையில் பி எம் ஸ்ரீ பள்ளிகள் மற்றும் மும்மொழிக் கொள்கையை ஏற்க மறுத்து இருமொழிக் கொள்கையே தொடரும் என தமிழக அரசு திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறது. தமிழக அரசின் பிடிவாதப் போக்கால் ஒருங்கிணைந்த திட்டத்தின் கீழ் கிடைக்க வேண்டிய ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் நிதி நிலுவையில் இருப்பதால் மாணவர்களின் கல்வித்தரம் மட்டுமல்லாது ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்குவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் தேசியக் கல்விக் கொள்கை அமலுக்கு வந்து தரமான கல்வி வழங்கப்பட்டு வரும் நிலையில் தமிழகம் மட்டும் அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதன் பின்னணியில் பெரும் அரசியல் இருப்பது தெரியவந்துள்ளது. தமிழகத்தில் உள்ள தனியார் சி.பி.எஸ்.இ பள்ளிகள் அனைத்திலும் மும்மொழிக் கொள்கை பின்பற்றப்படும் நிலையில் அரசுப்பள்ளிகளிலும் அத்திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும் என்பதில் திமுகவுக்கும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் என்ன பிரச்னைகள் இருக்கப்போகிறது என்று ஆராய்ந்த போது தான் பல உண்மைச் சம்பவங்கள் வெளிவந்திருக்கின்றன.
மத்திய அரசின் பி எம் ஸ்ரீ பள்ளிகள் தமிழகத்திற்குள் வந்தால் அரசுப்பள்ளி மாணவர்களும் மூன்று மொழிகளை தெரிந்து கொள்வார்கள் என்பதை விட தங்களின் வருமானம் போய்விடும் என்பதிலேயே திமுகவும் அதன் கூட்டணிக் கட்சித்தலைவர்களும் மும்மொழிக் கொளைக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறப்படுகிறது. அதனை உறுதிப்படுத்தும் விதமாக முதலமைச்சர் ஸ்டாலினின் மகள் செந்தாமரை நடத்தும் தனியார் பள்ளியில் தொடங்கி திமுகவின் மூத்த தலைவர்கள், முன்னாள் இந்நாள் அமைச்சர்கள், அவர்களின் உறவினர்கள் என 100க்கும் சிபிஎஸ்இ பள்ளிகளை நடத்தி வருவதும் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.
ஏழை, எளிய கிராமப்புற பின்னணியில் இருந்து வரும் மாணவ, மாணவியர்களுக்கு தரமான கல்வியை வழங்கி அவர்களின் எதிர்காலத்தை வளம்பெறச் செய்ய வேண்டிய தமிழக அரசே, அதற்கு முட்டுக்கட்டையாக இருப்பது தமிழக மக்கள் மத்தியில் மிகப்பெரிய அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இது ஒருபுறம் என்றால் தேசியக் கல்விக் கொள்கையின் சிறப்பம்சங்களை முழுமையாக படித்து தெரிந்து கொள்ளாமல் அரைகுறையாக அறிக்கை வெளியிட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நடத்தும் விஜய் வித்யாஸ்ரம் எனும் சிபிஎஸ்இ பள்ளிகளின் விவரங்கள் வெளியாகி அவரின் இரட்டை வேடத்தை அம்பலப்படுத்தியுள்ளது.
தேசிய கல்விக் கொள்கையில் இடம்பெற்றிருக்கும் நவீன உட்கட்டமைப்பு வசதிகளுடனே இயங்கி வரும் விஜய்யின் பள்ளியில் பிரிகேஜி வகுப்பிற்கு 45 ஆயிரமும், எல்கேஜி வகுப்புக்கு 46 ஆயிரமும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. பல்லாயிரக்கணக்கான ரூபாயை பள்ளிக் கட்டணமாக வசூலித்து லாபம் பார்க்கும் தவெக தலைவர் விஜய், தேசிய கல்விக் கொள்கையை எதிர்க்க வேண்டிய அவசியம் என்ன என்பதை அப்பள்ளியில் வசூலிக்கப்படும் கட்டணங்களை வைத்தே புரிந்து கொள்ள முடிகிறது.
இதையெல்லாம் தாண்டி மத்திய அரசு எந்த திட்டத்தை அறிவித்தாலும் அதனை கண்மூடித்தனமாக எதிர்க்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவனின் இரட்டை வேடமும் இவ்விவகாரத்தில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சென்னை வேளச்சேரியில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் அடிப்படையில் செயல்படும் புளு ஸ்டார் பள்ளியின் நிர்வாகக் குழு தலைவர் திருமாவளவன் தான் என்பதையும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அம்பலப்படுத்தியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் இந்தியை திணிக்க மத்திய அரசு துடிப்பதாக கூறி அண்மையில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்று பேசிய திமுக உட்பட அதன் கூட்டணிக் கட்சித் தலைவர்களும் ஏதாவது ஒரு விதத்தில் தனியார் பள்ளிகளுடன் தொடர்பில் இருப்பது தொடர்ந்து உறுதி செய்யப்பட்டு வருகிறது. தேர்தலுக்கு முன்பு ஒரு நிலைப்பாடும், தேர்தலுக்கு பின்பு அதற்கு எதிரான நிலைப்பாட்டையும் கொண்டிருக்கும் திமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் அதே யுக்தியை தேசிய கல்விக் கொள்கையிலும் பின்பற்ற முயற்சித்திருப்பது மக்கள் மத்தியில் அப்பட்டமாக அம்பலமாகியிருப்பதுடன் விவாதப்பொருளாகவும் மாறியுள்ளது.