தேசிய கல்விக் கொள்கையில் இந்தி திணிப்பு உள்ளது என நிரூபித்தால் ஒரு லட்ச ரூபாய் பரிசு தருகிறேன் என இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் சவால் விடுத்துள்ளார்.
உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு மதுரை தமுக்கம் மைதானத்தில் உள்ள தமிழன்னை சிலைக்கு இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்,.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தாய் மொழி மிக முக்கியமானது என்றும், தமிழ், எதிலும் தமிழ் என்பது நிலை நாட்டப்பட வேண்டும் என தெரிவித்தார்.
தமிழகத்தில் தமிழை பயிற்று மொழியாக மாற்ற வேண்டும் என்றும், தமிழகத்தில் ஐந்தாம் வகுப்பு வரை தமிழை மட்டுமே கற்பிக்க வேண்டும் எனறும் கூறினார். ஐந்தாம் வகுப்புக்கு மேல் மும்மொழி கல்விக் கொள்கை அமுல்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார்.
தேசிய கல்விக் கொள்கையில் இந்தி திணிப்பு உள்ளது என நிரூபித்தால் ஒரு லட்ச ரூபாய் பரிசு தருவதாகவும் அவர் கூறினார். நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட தேசிய கல்விக் கொள்கை தமிழகத்திலும் அமுல்படுத்தப்பட வேண்டும் என்றும், மத்திய அரசிடம் நிதி பெற்று தமிழக அரசு ஆங்கில மொழியை வளர்ப்பதாக கூறினார் மத்திய அரசின் நிதியை தமிழக பள்ளிக்கல்வித்துறை தவறாக பயன்படுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
தமிழகத்தில் உள்ள குழந்தைகளிடம் தமிழ் உச்சரிப்பு சரியாக இல்லை என்றும், தமிழகத்தில் தாய்மொழி கல்வி தரம் தாழ்ந்ததாக உள்ளதாகவும் அவர் தெரவித்தார் .தாய்மொழி வாயிலாக மாநிலங்களில் பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரிகள் அமைக்க வேண்டும் என்றும் அர்ஜூன் சம்பத் கேட்டுக்கொண்டார்.