அரசு பள்ளிகளில் மாணவர்களின் உயிருக்கு பாதுகாப்பற்ற நிலை இருக்கிறது என்று பாஜக மூத்த தலைவர் எச். ராஜா குற்றம்சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
நம் பள்ளி..!! நம் பெருமை..!! அரசு பள்ளி நம் வலிமை!! என்று வசனம் பேசும் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களே..!! அரசு பள்ளி நம் வலிமை என்கிறீர்களே? நீங்கள் உள்ளார்ந்த உணர்வோடு தான் இந்த வார்த்தையை சொல்கிறீர்கள் என்பது உண்மையானால்? தமிழகத்தில் அரசு ஆரம்ப பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 3192 பட்டதாரி ஆசிரியர்களுக்கான காலிப்பணியிடங்களுக்கும், 2600 க்கும் மேற்பட்ட முதுநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்களுக்கும், 3058 தலைமையாசிரியர் காலிப்பணியிடங்களுக்கும் ஆசிரியர்களை நியமிக்காமல் கடந்த நான்கு ஆண்டுகளாக காலதாமதம் செய்வது ஏன்? பள்ளிகளில் ஆசிரியர்களே மாணவிகளுக்கு பாலியல் வன்கொடுமை இழைப்பதாக நாள்தோறும் பத்திரிகைகள் மற்றும் ஊடகங்கள் வாயிலாக பாதிக்கப்பட்ட மாணவிகள் தரப்பில் இருந்து புகார் வருகிறதே?
அரசு பள்ளிகளில் பெண் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக கடந்த நான்கு ஆண்டுகளில் எந்தவித பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் தமிழக பள்ளி கல்வித்துறை நிர்வாகம் செய்யாதது ஏன்? தமிழகத்தில் நூற்றுக்கணக்கான அரசு பள்ளிளில் மாணவர் வருகை பதிவு குறைவாக இருக்கிறதே? அரசு பள்ளிகளில் மாணவர் கல்வி இடைநிற்றல் அதிகமாக இருக்கிறதே?
அதை சரி செய்ய கடந்ந நான்கு ஆண்டுகளாக திமுக அரசும், தமிழக பள்ளி கல்வித்துறை நிர்வாகமும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியமாக இருப்பது ஏன்? அரசு பள்ளிகளில் சர்வதேச தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வழிவகை செய்யும் மத்திய அரசின் Prime Ministers School’s For Rising India திட்டத்தில் தமிழக அரசு பள்ளிகளை சேர்க்காமல் திமுக அரசு அரசியல் நாடகம் நடத்துவது ஏன்?
மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கையை ஏற்க முடியாது தமிழகத்தில் இருமொழி கொள்கை தான், மும்மொழி கல்வித்திட்டத்திற்கு அரசு பள்ளிகளில் அனுமதி இல்லை என்கிறீர்களே? பிறகு ஏன் திமுகவினர் தமிழகம் முழுவதும் மும்மொழி கற்பிக்கும் CBSE பள்ளிகளை நடத்துகிறீர்கள்? திமுகவினர் நடத்தும் CBSE பள்ளிகளை சமச்சீர் கல்வித்திட்ட பள்ளிகளாக மாற்ற வேண்டியது தானே? தமிழக பள்ளிகளில் தமிழ் மற்றும் ஆங்கிலம் தவிர வேறு மொழிகளுக்கு அனுமதி இல்லை என்கிறீர்களே? பிறகு எந்த அடிப்படையில் உங்கள் மகன் திரு.கவின் பொய்யாமொழியை ஆழ்வார்பேட்டை International Curriculum School ல் சேர்த்து பிரெஞ்ச் மொழி படிக்க வைக்கிறீர்கள்?
தமிழ் வாழ்க என திராவிட மேடைகள் தோறும் முழங்குகிறீர்களே? 2022 – 2023 கல்வியாண்டில் 10 வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ் பாடத்தில் 47,000 மாணவர்கள் தோல்வி அடைந்திருக்கிறார்கள் என தெரிவித்துள்ளார்.
2023- 2024 கல்வியாண்டில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ் பாடத்தில் 36,000 மாணவர்கள் தோல்வி அடைந்திருக்கிறார்கள். தாய்மொழி பாடத்தில் பொதுத்தேர்வில் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் தோல்வியடையும் அவல நிலையில் தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் கல்வி கற்பித்தல் திறன் மற்றும் மாணவர்களின் கற்றல் திறன் இருக்கிறதே? இதை நிவர்த்தி செய்ய இதுவரையிலும் தமிழக பள்ளி கல்வித்துறை எந்த ஒரு முயற்சியும் எடுக்கவில்லையே ஏன்? என எச். ராஜா கேள்வி எழுப்பி உள்ளார்.
தமிழகத்திலுள்ள பல அரசு பள்ளிகளின் வகுப்பறை கட்டிடங்கள் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் இருக்கிறதே? பல பள்ளிகளில் வகுப்பறை கட்டிடங்களின் மேற்கூரை பெயர்ந்து கீழே விழுந்திருக்கும் காட்சிகளை பத்திரிகைகள் மற்றும் ஊடகங்கள் செய்திகளாக வெளியிட்டுள்ளனவே அந்த பள்ளி கட்டிடங்கள் அனைத்தையும் புதுப்பிக்க இதுவரை தமிழக பள்ளி கல்வித்துறை எந்த நடவடிக்கையும் எடுத்தது போல் தெரியவில்லையே? எச். ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த நான்கு ஆண்டு கால திமுக ஆட்சியில் தமிழகத்திலுள்ள அரசு பள்ளிகளில் புதிதாக கட்டப்பட்ட வகுப்பறை கட்டிடங்களில் கட்டி முடிக்கப்பட்ட மூன்றே மாதங்களில் மேற்கூரை பெயர்ந்து கீழே விழும் காட்சிகளையும், பள்ளி சுற்றுச்சுவர் அப்படியே மழையில் முற்றிலும் கீழே சாய்ந்துள்ளதையும் ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் செய்தியாக வருவதை அனைவரும் பார்க்கிறோம் என தெரிவித்துள்ளார்.
பள்ளிக்கு வரும் குழந்தைகளின் உயிர் மீது அக்கறை இல்லாமல் தரமற்ற கட்டிடங்களை கட்டும் தரமற்ற கட்டுமான ஒப்பந்தாரர்களுக்கும், நிறுவனங்களுக்கும் திமுக ஆட்சியில் டெண்டர் ஒப்பந்தம் அளிப்பது ஏன்? சிவகங்கை மாவட்டம் சாக்கோட்டை ஒன்றியம் பொய்யாவயல் அரசு பள்ளியில் மாணவர் ஒருவர் மின்சாரம் தாக்கி இறந்து போன கொடுந்துயரமும், சிவகங்கை மாவட்டம் இளையான்குடி ஒன்றியம் ஆழி மதுரை அரசு ஆரம்பப் பள்ளியில் கழிப்பறை இருந்தும் மாணவிகள் அதை பயன்படுத்த பள்ளி நிர்வாகம் அனுமதிக்காத காரணத்தால் இயற்கை உபாதைக்காக திறந்தவெளிக்கு சென்று கண்மாயில் விழுந்து இரண்டு மாணவிகள் இறந்து போன கொடுந்துயர நிகழ்வு இருதினங்களுக்கு முன்னால் நிகழ்ந்ததே? உங்களுடைய சொந்த மாவட்டமான திருச்சி மாவட்டம் லால்குடி தாலுக்காவில் ஒரு அரசு பள்ளியில் வகுப்பறை கட்டிடம் இல்லாத காரணத்தால் மாணவர்கள் மரத்தடியில் கல்வி பயிலும் ஒரு புகைப்படம் பத்திரிகைகள், ஊடகங்கள், சமூக வலைதளங்களில் வெளிவந்ததே? இப்படிப்பட்ட நிலையில் அரசு பள்ளிகள் இருப்பதைத்தான் அரசு பள்ளி நம் வலிமை என்கிறீர்களா? அரசு பள்ளிகளில் மாணவர்களின் உயிருக்கு பாதுகாப்பற்ற நிலை இருக்கிறதே அதை சரிசெய்ய திமுக அரசும், தமிழக பள்ளி கல்வித்துறையும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல்…
1967 ல் தட்டினால் தங்கம்! வெட்டினால் வெள்ளி! ரூபாய்க்கு மூன்று படி அரிசி! என திமுக நிறுவனர் அண்ணாதுரை அடுக்குமொழியில் வசனம் பேசி வாக்குறுதி அளித்து திமுக ஆட்சிக்கு வந்த பின் “மூன்றுபடி லட்சியம் ஒரு படி நிச்சயம்” என அந்தர்பல்டி அதையும் தமிழகம் முழுவதும் கொடுக்காமல் தமிழக மக்களை ஏமாற்றியதை போல் … நம் பள்ளி! நம் பெருமை! அரசு பள்ளி நம் வலிமை! என தமிழக மக்களை ஏமாற்ற திராவிட மாடல் திசைதிருப்பும் வசனத்தை பேசாமல் தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளை திமுகவினர் நடத்தும் தனியார் CBSE பள்ளிகளுக்கு நிகராக தரம் உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை எச். ராஜா
அறிவுறுத்தியுள்ளார்.