நாக்பூரை சேர்ந்த ஒரு தம்பதியர் மண் மற்றும் தண்ணீர் இல்லாமல், உட்புற அறையில், வெற்றிகரமாக குங்குமப் பூ சாகுபடி செய்து லட்சங்களில் வருமானம் பார்க்கின்றனர். அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
விவசாயிகளுக்கு அதிக வருமானம் தரக்கூடிய சாகுபடி பயிராக குங்குமப்பூ உள்ளது. குங்குமப்பூ சூரிய ஒளி மசாலா என்று அழைக்கப்படுகிறது. குங்குமப்பூ அதிக ஊட்டச்சத்து கொண்டதாகும். குங்குமப்பூ உலகின் மிக விலையுயர்ந்த மசாலாப் பொருளாகும். லாச்சா அல்லது மோங்க்ரா, அகிலா, ஸ்பானிஷ் & க்ரீம் ஆகிய மூன்று வகையான குங்குமப் பூக்கள் உள்ளன.
லாச்சா குங்குமப்பூ இந்தியாவில் மட்டுமே கிடைக்கிறது. பொதுவாக அடர் சிவப்பு நிறத்தைக் கொண்டுள்ளது. இது உலகளவில் மிகவும் அடர் நிற குங்குமப்பூ ஆகும். இந்தியாவின் காஷ்மீரில் அதிகம் உற்பத்தி செய்யப் படுகிறது.
மேலும், நீண்டகால நறுமணம் மற்றும் சுவை காரணமாக, இது உலகின் சிறந்த குங்குமப்பூ வகையாக உள்ளது. அகிலா வகை குங்குமப்பூவை ஈரான் அதிகம் உற்பத்தி செய்கிறது. தரம் குறைந்த 3வது வகை குங்குமப்பூவை அதிகளவில் அமெரிக்காவே வாங்கி கொள்கிறது.
இந்தியாவில் குங்குமப்பூவை அதிகமாக உற்பத்தி செய்யும் மாநிலம் ஜம்மு காஷ்மீர் ஆகும். இமாச்சலப் பிரதேசமும், குங்குமப்பூ சாகுபடியில் முன்னணியில் உள்ளது. இது தவிர, குஜராத், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், போன்ற ஒரு சில மாநிலங்களில் குங்குமப் பூ பயிரிடப்படுகிறது.
மிதமான வெயில், சராசரி மழை ஆகியவை குங்குமப்பூ வளர ஏற்ற சூழலை உருவாக்குக்கின்றன. குங்குமப்பூ தண்டு இல்லாத பயிர் வகையாகும். இது 15 முதல் 25 சென்டிமீட்டர் உயரம் வரை வளர்கிறது. மெல்லிய புல் போன்ற இலையில் குங்குமப்பூ பூக்கிறது. ஒரு செடியில் 2 முதல் 3 பூக்கள் வரை மட்டுமே பூக்கும். அபூர்வ மருத்துவ குணமும், மிகக் குறைந்த உற்பத்தியும் குங்குமப்பூவின் விலை அதிகமாக இருப்பதற்கு முக்கிய காரணமாகும்.
குங்குமப்பூவின் முக்கியத்துவம் அறிந்த விவசாயிகள், அவற்றை பாதுகாப்பாக சாகுபடி செய்கின்றனர். குங்குமப்பூ சாகுபடியால் ஆண்டுக்குப் பல கோடிகளை வருமானமாக ஈட்டுகின்றனர்.
அந்த வகையில், நாக்பூரை சேர்ந்த அக்ஷய் மற்றும் திவ்யா லோஹகரே தம்பதியர் குங்குமப் பூவை உட்புற அறையில் சாகுபடி செய்து சாதனை படைத்துள்ளனர்.
400 சதுர அடி பரப்பளவு கொண்ட ஒரு சிறிய அறையில், மண் அல்லது தண்ணீர் இல்லாமல், ஏரோபோனிக் நுட்பத்தைப் பயன்படுத்தி பயிரிட்டுள்ளனர்.
பிபிஏ பட்டதாரியான அக்ஷய் மற்றும் வங்கிப் பணியாளரான திவ்யா, இருவரும்,குங்குமப் பூ சாகுபடி செய்ய முடிவெடுத்தனர். குங்குமப்பூ சாகுபடியின் நுணுக்கங்களைப் புரிந்து கொள்ள, காஷ்மீரில் மூன்றரை மாதங்கள் நேரடி பயிற்சி பெற்றனர். அனுபவம் வாய்ந்த குங்குமப் பூ விவசாயிகளிடமிருந்து நிறைய தகவல்களைக் கற்றுக்கொண்டனர்.
பிறகு 100 குங்குமப்பூ தண்டுகளுடன் சிறிய அளவில் சாகுபடியைத் தொடங்கினர். முதலில் ஒரு சில கிராம் மட்டுமே சாகுபடி செய்ய முடிந்தது. ஆனாலும் தளர்ச்சி அடையாமல், 350 கிலோ விதைகளில் முதலீடு செய்தனர். இந்தமுறை, அக்ஷய்-திவ்யா தம்பதியர் சுமார் 1,600 கிராம் விளைச்சலைக் கண்டார்கள்.
தொடர்ந்து, ஹிங்னாவில் 400 சதுர அடி பரப்பளவில் ஒரு ஆலையையும், 480 சதுர மீட்டர் பரப்பளவில் இன்னொரு ஆலையையும், அமைத்தனர். கடந்த இரண்டு ஆண்டுகளில்,ஆண்டுக்குச் சுமார் 50 லட்சம் வரை லாபம் பெற்றுள்ளனர்.
100 சதுர அடியில் உற்பத்தி ஆலையை உருவாக்க 10 லட்சம் ரூபாய் வரை முதலீடு ஆகும் என்றும், இதன் மூலம், ஆண்டுதோறும் 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள குங்குமப்பூவை சாகுபடி செய்யலாம் என்றும் அக்ஷய் தெரிவித்துள்ளார். காஷ்மீர் குங்குமப்பூ நிறுவனத்தால் தரப்படுத்தப்பட்ட குங்குமப்பூ, ஒரு கிராம் 630 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
ஆகஸ்ட் மற்றும் டிசம்பர் மாதங்களுக்கு இடையில் குங்குமப்பூ அறுவடை செய்யப்படுகிறது என்றும், மீதமுள்ள மாதங்கள் விதை சாகுபடி செய்யப்படுகிறது என்றும் கூறியுள்ளார்.
பாரம்பரிய விவசாயத்தை தொழில்நுட்பத்துடன் இணைத்து, மண் அல்லது தண்ணீர் இல்லாமல் காற்று மற்றும் மூடுபனியைப் பயன்படுத்தி குங்குமப்பூவை வளர்ப்பதாக கூறும் அக்ஷய்-திவ்யா தம்பதியர், குங்குமப்பூ சாகுபடி தங்கள் வாழ்க்கையை முன்னேற்றியுள்ளது என்று கூறியுள்ளனர்.
கூடுதலாக, குங்குமப்பூ சாகுபடி குறித்த பயிற்சி மற்றும் வழிகாட்டுதலையும் வழங்கி வருகிறார்கள். இதுவரை 150 பேருக்குப் பயிற்சி அளித்துள்ளதாகவும், அதில், 29 பேர் சொந்த குங்குமப் பூ உற்பத்தி ஆலைகளை வெற்றிகரமாக அமைத்துள்ளனர் என்றும் அக்ஷய் தெரிவித்துள்ளார்.