தமிழ்நாட்டில் வெயில் நாளுக்கு நாள் அதிகமாகமாகி வரும் நிலையில் மண் பாண்டங்களின் விற்பனையும் கணிசமாக அதிகரித்து வருகிறது. விதவிதமான வடிவில் விற்பனையாகும் மண்பாண்டங்கள் குறித்தும் அதனால் ஏற்படும் பலன்கள் குறித்தும் இந்த செய்தி தொகுப்பில் சற்று விரிவாக பார்க்கலாம்.
தமிழ்நாட்டில் கோடைக் காலம் தொடங்குவதற்கு முன்பாகவே வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் இயல்பை விட கூடுதலாக பதிவாகி வருகிறது. அடுத்த ஒரு வார காலத்திற்கு வெப்பத்தின் அளவு மேலும் அதிகரிக்கும் என வானிலை ஆய்வுமையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
காலநிலை மாற்றத்தால் உருவாகும் வெப்பத்தின் தாக்கத்த சமாளிக்க முடியாமல் பொதுமக்கள் திணறுவதையும் பார்க்க முடிகிறது. வெயிலிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள பல்வேறு வழிமுறைகளை பின்பற்றினாலும், அதில் முக்கிய பங்கு வகிக்கக் கூடிய குளிர்ச்சியளிக்கும் மண்பாண்டங்களை பொதுமக்கள் விரும்பி வாங்கத் தொடங்கியுள்ளனர்.
சென்னை போன்ற பெருநகரங்களில் மழையாக இருந்தாலும் சரி வெயிலாக இருந்தாலும் சரி மற்ற மாவட்டங்களை ஒப்பிடும் போது சற்று அதிகமாகத்தான் இருக்கிறது. வெயிலில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ள மண்பாண்டங்களை விரும்பி வாங்கும் நிலையில், மண் கூஜாக்கள், மண் வாட்டர் பாட்டில்கள், மண் பானைகள், குழாயுடன் கூடிய மண் பானைகள் என பல்வேறு வடிவங்களில் விற்பனை செய்யப்படுகின்றன. விற்பனைக்கு வந்த சில நாட்களிலேயே அதிகளவு மண்பாண்ட பானைகள் விற்பனையாகி வருகின்றன
மண்பாண்டங்களில் தண்ணீரை ஊற்றி வைக்கும் போது அடுத்த மூன்று மணி நேரத்தில் குளிர்ச்சியான நீராக மாறி விடுகிறது. பாண்டிச்சேரி, விழுப்புரம், பண்ருட்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சென்னைக்கு விற்பனைக்காக வரும் மண் பானைகள் 50 ரூபாயிலிருந்து 600 ரூபாய் வரை விற்கப்படுகின்றன
நவீன உலகில் எத்தனையோ புதுப்புது கண்டுபிடிப்புகள் வந்து கொண்டே இருந்தாலும் பொதுமக்கள் பழமையை இன்னமும் மறக்கவில்லை என்பதை இந்த மண்பாண்ட விற்பனைகள் தெளிவுபடுத்துகின்றன.