ரயில் நிலையத்தில் இந்தி பெயர் பலகையை அழிக்கும் திமுகவினர், அமலாக்கத் துறை மற்றும் வருமான வரித் துறை அலுவலகத்துக்கும் கருப்பு பெயிண்டுடன் செல்ல வேண்டுமென பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அமலாக்கத் துறை அலுவலக முகவரி ஒருவேளை திமுக தொண்டர்களுக்குத் தெரியவில்லை என்றால், அங்கு அடிக்கடி செல்லும் திமுக அமைச்சர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளட்டும் என கிண்டலாக தெரிவித்துள்ளார்.
மேலும் மும்மொழிக் கொள்கை பாடத்திட்டத்தைக் கடைப்பிடிக்கும் சிபிஎஸ்இ, மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் தங்களது சந்ததிகளை சேர்த்துவிட்டு, அதே கொள்கைக்கு எதிராக திமுகவினர் பொய் பிரசாரம் மேற்கொள்வதாகவும், இந்தி திணிப்பு என்ற கற்பனை கதைக்குப் பின்னால் ஓடி ஒளிவதைத் தவிர்த்துவிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சில கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டுமென்று அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
திமுகவினர் நடத்தும் பள்ளிகளில் இந்தி மற்றும் வெளிநாட்டு மொழிகள் பயிற்றுவிக்கப்படும் அதேவேளையில், அரசுப் பள்ளியில் பயிலும் ஏழை எளிய மாணவர்களுக்கு 3-ஆவது மொழி பயிலும் உரிமை மறுக்கப்படுவது ஏன் என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
திராவிட மொழிக் குடும்பத்தில் 25 மொழிகள் வகைபடுத்தப்பட்ட நிலையில், கன்னடம், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளை அரசுப் பள்ளி மாணவர்கள் பயில தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிப்பது ஏன் என்ற கேள்விக்கு முதலமைச்சர் பதிலளிக்க வேண்டும் என்றும் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.