பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுவதன் மூலம் அவர்களது வாழ்வாதாரத்தை மத்திய அரசு உயர்த்தியுள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் 9 கோடியே 80 லட்சம் விவசாயிகளுக்கு பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 19வது தவணையாக தலா 2 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி பீகார் மாநிலம் பகல்பூரில் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி பங்கேற்று விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கினார்.
இதை மேற்கோள்காட்டி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் கடந்த ஆறு ஆண்டுகளில் 3 லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாய் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார். நமது விவசாய சகோதர, சகோதரிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் அதற்கு இது ஒரு உதாரணம் என்றும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.