எதிர்பாராத திருப்பமாக, ரஷ்யாவுக்கு எதிராக ஐநா சபையில் உக்ரைன் கொண்டு வந்த தீர்மானத்தை எதிர்த்து அமெரிக்கா வாக்களித்துள்ளது. ஐநா சபையில், ரஷ்யாவுடன் அணி சேர்ந்த அமெரிக்காவின் நிலைப்பாடு , சர்வதேச நாடுகளைக் குறிப்பாக நேட்டோ நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. அமெரிக்கா ரஷ்யாவுக்கு ஆதரவாக நிற்பது ஏன் ? என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது 2022ம் ஆண்டு பிப்ரவரி 24 ஆம் தேதி ரஷ்யா ராணுவ நடவடிக்கை எடுத்தது. இதனையடுத்து உக்ரைன்-ரஷ்யா போர் தொடங்கியது. உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா மற்றும் நேட்டோ நாடுகள், நிதி மற்றும் ஆயுத உதவிகளை செய்தன.
போர் தொடங்கி 3 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளார். ரஷ்ய அதிபர் புதினும், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும் பேச்சுவார்த்தை நடத்தவேண்டும் என்று வலியுறுத்திய அதிபர் ட்ரம்ப், போர் முடிவுக்கு வராமல் இருக்க உக்ரைன் அதிபரே காரணம் என்று கூறியிருந்தார்.
மேலும் ஒரு சர்வாதிகாரி போல செயல்படும் கோமாளியான உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பதவி விலக வேண்டும் என்றும் கடுமையாக எச்சரித்திருந்தார். பதிலுக்கு, உக்ரைனை நேட்டோ உறுப்பினர் ஆக்கினால், அதிபர் பதவிலிருந்து வெளியேற தயார் என்று ஜெலன்ஸ்கி சவால் விட்டிருந்தார்.
இந்நிலையில், உக்ரைனில் இருந்து ரஷ்யா படைகளை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தி,ஐநா சபையில், உக்ரைன் ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்தது. உக்ரைனுக்கு எதிரான போரை அமைதியான முறையில் தீர்க்கவும் இந்த தீர்மானம் வலியுறுத்தியது.
உக்ரைன் கொண்டு வந்த தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் 93 நாடுகள் ஆதரவாக வாக்களித்தன. அமெரிக்கா, ரஷ்யா, இஸ்ரேல் உள்ளிட்ட 18 நாடுகள் தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்தன. இந்தியா, சீனா, பிரேசில், ஈரான், ஈராக், பாகிஸ்தான், பங்களாதேஷ், சவுதி அரேபியா, தென்னாப்பிரிக்கா, இலங்கை, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், வியட்நாம் உள்ளிட்ட 65 ஐநா உறுப்பு நாடுகள் இந்த வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. ரஷ்யாவுக்கு எதிரான முந்தைய தீர்மானங்களை விடவும் குறைந்த ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதற்கிடையே, அமைதிக்கான பாதை என்ற சுருக்கமான ஒரு போட்டித் தீர்மானத்தையும் அமெரிக்கா தாக்கல் செய்தது. அமெரிக்கா கொன்டு வந்த தீர்மானத்துக்கு ஆதரவாக 93 நாடுகளும், எதிராக 8 நாடுகளும் வாக்களித்தன. இந்தியா உட்பட 73 நாடுகள் வாக்களிக்காமல் புறக்கணித்தன. அதிக ஆதரவுடன் ஐநா சபையில் அமெரிக்கா கொண்டு வந்த போட்டி தீர்மானம் ஏற்றுக் கொள்ளப் பட்டது.
முன்னதாக, உக்ரைன் மற்றும் நேட்டோ நாடுகளைத் தவிர்த்து, சவூதி அரேபியா தலைநகர் ரியாத்தில் ரஷ்யாவுடன் நேரடிப் பேச்சுவார்த்தையை அமெரிக்கா நடத்தியது குறிப்பிடத் தக்கது.
இந்நிலையில்,வெள்ளை மாளிகையில், அதிபர் ட்ரம்பை சந்தித்த பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன்,உக்ரைன் போர் தொடர்பான அமைதி பேச்சுவார்த்தை முன்னேற்ற பாதையில் செல்வதாக பாராட்டியுள்ளார். மேலும், உக்ரைன் விவகாரத்தில், எந்தவொரு அமைதி ஒப்பந்தமும் பாதுகாப்பு உத்தரவாதங்களுடன் இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
ரஷ்யா- உக்ரைன் போர் நிறுத்த உடன்பாட்டில், உக்ரைனில் ஐரோப்பிய அமைதி காக்கும் படைகள் இருக்கவேண்டும் என்பதை இரு நாட்டுத் தலைவர்களும் ஒப்புக்கொண்டனர். மேலும், உக்ரைனில் அமைதியைப் பராமரிப்பதற்கான செலவுகளை அமெரிக்காவுடன் சேர்ந்து ஐரோப்பிய நாடுகளும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று அதிபர் ட்ரம்ப் கூறியுள்ளார். வரும் நாட்களில்,வெள்ளை மாளிகையில் அதிபர் ட்ரம்பைச் சந்திக்கும் பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் இது குறித்து சம்மதம் தெரிவிப்பார் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
ரஷ்யாவுக்கு எதிரான முந்தைய ஜோ பைடன் நிர்வாக முடிவுகளில் இருந்து முற்றிலுமாக மாறுபட்ட நிலைப்பாட்டை அதிபர் ட்ரம்ப் எடுத்து வருகிறார். கடந்த 3 ஆண்டுகளில், உக்ரைனுக்கு சுமார் 300 பில்லியன் டாலர்களை அமெரிக்கா போர் உதவியாக தந்துள்ளது. தேவையற்ற செலவுகளைக் குறைக்க முடிவு எடுத்துள்ள அதிபர் ட்ரம்ப், உக்ரைனுக்குச் செலவு செய்வதை நிறுத்தியுள்ளார்.
உக்ரைன் போருக்காக அமெரிக்கா வழங்கிய நிதியை உக்ரைன் திருப்பி தர வேண்டும் என்றும் அல்லது உக்ரைனில் உள்ள கனிம வளங்களின் 50 சதவீதத்தை அமெரிக்காவுக்கு தர வேண்டும் என்றும் அதிபர் ட்ரம்ப் தெரிவித்திருந்தார். விரைவில், வெள்ளை மாளிகைக்குச் சென்று அதிபர் ட்ரம்பை சந்திக்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, கனிம வளங்கள் தொடர்பான தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார் என்றும், அமெரிக்காவின் போர் நிறுத்த ஒப்பந்தந்தை நிபந்தனை இன்றி ஏற்றுக் கொள்வார் என்றும் கூறப்படுகிறது.
இதற்கிடையில், ஐரோப்பிய ஒன்றியமும், பிரிட்டனும் ரஷ்யா மீது புதிதாக பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன. இது கடந்த 3 ஆண்டுகளில் ரஷ்யா மீது விதிக்கப்படும் 16வது சுற்று தடைகளாகும்.