கிரிமினல் வழக்குகளில் தண்டனை பெற்ற எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் தேர்தலில் போட்டியிட நிரந்தர தடை விதிக்க நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தரப்பு வாதத்தை முன்வைத்துள்ளது.
குற்ற வழக்குகளில் சிக்கி தண்டனை பெறும் எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள் தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை விதிக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என, வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாய் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் தீபங்கர் தத்தா, மன்மோகன் அடங்கிய அமர்வில் கடந்த 10ம் தேதி விசாரணைக்கு வந்த நிலையில், விரிவான பிரமாண பத்திரங்கள் தாக்கல் செய்ய மத்திய அரசு மற்றும் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடப்பட்டது.
இதையடுத்து மத்திய அரசு தரப்பில் பிரமாண பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதில் தண்டனை பெறும் எம்.பி., எம்.எல்.ஏக்களின் தகுதிநீக்கம் தொடர்பானவற்றில் முடிவெடுக்கும் அதிகாரம் நாடாளுமன்றத்துக்கு மட்டுமே உள்ளதென கூறப்பட்டுள்ளது.
தற்போது உள்ள 6 ஆண்டுகள் தடை என்பதே பொருத்தமாக இருக்கும் எனவும் வாழ்நாள் தடை விதிப்பது என்பது மிகவும் கடுமையானதாக இருக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.