தென்காசியில் பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற ஆட்டோவும், அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஆட்டோ ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார்.
தென்காசி மாவட்டம் புளியங்குடி பகுதியைச் சேர்ந்தவர் செல்வகுமார். ஆட்டோ ஓட்டுநரான இவர் தனது ஆட்டோவில் பள்ளி மாணவர்களை ஏற்றிக்கொண்டு திருமங்கலம் – கொல்லம் தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்று கொண்டிருந்தார்.
சிந்தாமணி தனியார் மருத்துவமனை அருகே ஆட்டோ சென்றுகொண்டிருந்தபோது, எதிரே வந்த அரசு பேருந்து மீது நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் ஆட்டோ ஓட்டுநர் செல்வகுமார் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார்.
விபத்தில் படுகாயமடைந்த 3 பள்ளி குழந்தைகளை அப்பகுதி மக்கள் மீட்டு சிகிச்சைக்காக அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
விபத்தில் படுகாயமடைந்த மாணவி ஒருவர், உயிருக்கு ஆபத்தான நிலையில் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.