சென்னையில் உள்ள 5 கடற்கரை பகுதிகளின் தூய்மைப் பணியை தனியாருக்கு வழங்க முடிவு செய்துள்ளதாக மாநகராட்சி கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியின் மாதாந்திர மாமன்ற கூட்டம் மேயர் பிரியா ராஜன் தலைமையில் நடைபெற்றது. ரிப்பன் மாளிகையில் மன்ற கூட்டத்தில் நடைபெற்ற கூட்டத்தில் துணை மேயர் மகேஷ் குமார், ஆணையர் குமரகுருபரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மாமன்ற கூட்டத்தில் பங்கேற்க 200 கவுன்சிலர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், 50 பேர் மட்டும் வருகை தந்தால் கூட்டம் அரங்கம் வெறிச்சோடி காணப்பட்டது.
இதனால், ஆதங்கப்பட்ட துணை மேயர் மகேஷ்குமார், சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்திற்கு உறுப்பினர்கள் குறித்த நேரத்திற்கு வர வேண்டும் என அறிவுறுத்தினார்.
மாமன்ற கூட்டத்தில் சென்னை மாநகராட்சியின் கடன் குறித்து பாஜக கவுன்சிலர் உமா ஆனந்த் கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்து பேசிய மேயர் பிரியா, கடந்த ஜனவரி 1- ஆம் தேதி வரை சென்னை மாநகராட்சிக்கு 3 ஆயிரத்து 65 கோடி கடன் உள்ளதாக தெரிவித்தார்.
மொத்த கடனில் ஆயிரத்து 577 கோடி ரூபாய் கடன் திருப்பி செலுத்தப்பட்டதாகவும், மீதமுள்ள தொகைக்கு மாதந்தோறும் வட்டி செலுத்தி வருவதாக கூறினார். மேலும், ஒவ்வொரு காலாண்டுக்கு ஒரு முறை அசல் செலுத்தி வருவதாகவும் மேயர் பிரியா தெரிவித்தார்.
சென்னை மணலியில் மாநகராட்சிக்கு சொந்தமான பயோ கேஸ் வெடித்து சிதறியதில் ஆப்ரேட்டர் ஒருவர் உயிரிழந்தது தொடர்பாக காங்கிரஸ் உறுப்பினர் தீர்த்தி கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த ஆணையர் குமரகுருபரன், சென்னை மணலியில் பயோ கியாஸ் விபத்து குறித்து தணிக்கை செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், ஒரு வாரத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்றும், அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இதனிடையே, சென்னையில் இயங்கி வரும் பெரும்பான்மையான இயற்கை உரம் தயாரிக்கும் கூடங்களை மூட முடிவு செய்துள்ளதாக மாநகராட்சி அறிவித்துள்ளது. 15 மண்டங்களில் இயங்கி வரும் 190 இயற்கை உரம் தயாரிக்கும் கூடங்களில் 168 கூடங்களை மூட முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளிலும் இயங்கி வரும் இயற்கை உரம் தயாரிக்கும் கூடங்களை மூடவுள்ளதாகவும், பொதுமக்கள் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
சென்னை அண்ணா நகர் பகுதிகளில் உள்ள முதன்மை மற்றும் இரண்டாம் நிலை சாலைகளில் பார்க்கிங் நிர்வாகத்தை மேற்கொள்ள மாநகராட்சி கூட்டத்தில் முன்மொழியப்பட்டது. அதன்படி, ஒரு மணி நேரத்திற்கு மேல் இருசக்கர வாகனங்களுக்கு 20 ரூபாயும், நான்கு சக்கர வாகனங்களுக்கு 40 ரூபாய் கட்டணம் வசூல் நிர்ணயிக்கப்பட்டது. மேலும், இலகு ரக மற்றும் கனரக வாகனங்களுக்கு 60 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
சென்னையில் உள்ள வணிக வளாக கடைகளுக்கான மாத வாடகை மாதம்தோறும் 5ஆம் தேதிக்குள் செலுத்த தவறினால் 12 சதவீதம் அபராதம் விதிக்க மாநகராட்சி கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டது. மேலும், அனைத்து வணிக வளாக கடைகளின் வாடகையும் ஆண்டுதோறும் 15 சதவீதம் உயர்த்தப்பட்ட நிலையில், 5 சதவீதமாக குறைத்து மாமன்ற கூட்டத்தில் வழிவகை செய்யப்பட்டது.
சென்னையில் மழைநீர் வடிகால்களில் நவீன இயந்திரங்கள் மூலம் தூர்வாரும் பணியை மேற்கொள்ள மாநகராட்சி கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டது. ஒவ்வொரு வட்டார அலுவலகத்திற்கும் 10 கோடி ரூபாய் செலவில் நவீன இயந்திரங்கள் மூலம் தூர்வாரும் பணியினை மேற்கொள்ளவும், இப்பணிகளுக்கு ஒப்பந்தபுள்ளிகள் கோரவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
சென்னையில் உள்ள 5 கடற்கரைகளின் தூய்மை பணியை தனியாருக்கு வழங்க முடிவு செய்துள்ளதாக மாநகராட்சி அறிவித்துள்ளது. மெரினா, பட்டினப்பாக்கம், திருவான்மியூர், பெசன்ட் நகர், புது கடற்கரைகளின் தூய்மை பணியை தனியாருக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், மெரினா கடற்கரையை ஒரு வருடத்திற்கு தூய்மை பணி மேற்கொள்ள 7 கோடியே 9 லட்சம் ரூபாய் தோராயமாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பட்டினப்பாக்கம், பெசன்ட் நகர் கடற்கரை, திருவான்மியூர், புது கடற்கரை ஆகிய 4 கடற்கரைகளிலும் ஒரு வருட தூய்மை பணி மேற்கொள்ள 4 கோடியே 54 லட்சத்து 99 ஆயிரம் ரூபாய் தோராய மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.