கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தியவர் பலியான சம்பவத்திற்கு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள பதிவில், கள்ளக்குறிச்சியில், கள்ளச்சாராயத்திற்கு 66 உயிர்களைப் பலி கொண்ட கள்ளச்சாராய வியாபாரிகள் ஜாமீனில் வெளிவந்து, மீண்டும் கள்ளச்சாராயம் காய்ச்சி, தங்கராசு என்பவரைப் பலியிட்டிருக்கிறார்கள்.
ஜாமீனில் வெளிவந்த கள்ளச்சாராய வியாபாரிகள் என்ன செய்கிறார்கள் என்பதைக் கூட கண்காணிக்காமல் மாவட்டக் காவல்துறை செயல்படுகிறது என்பது, ஒட்டு மொத்த தமிழகக் காவல்துறைக்கே கரும்புள்ளி. தனது துறையின் அடிப்படைப் பணிகளைக் கூட கவனிக்காதவண்ணம், அந்தத் துருப்பிடித்த இரும்புக்கரத்தை வைத்துக் கொண்டு என்ன செய்து கொண்டிருக்கிறார் முதலமைச்சர் திரு. ஸ்டாலின்? என கேள்வி எழுப்பியுள்ளார்.
மீண்டும் அதே பகுதியில், அதே கள்ளச்சாராய வியாபாரிகளால் ஒரு உயிர் போயிருக்கிறதே. இதற்கு யார் பொறுப்பு? 66 உயிர்களைக் கொன்று ஜாமீனில் வெளிவந்த கள்ளச்சாராய வியாபாரிகள், மீண்டும் துணிச்சலாக கள்ளச்சாராயம் காய்ச்சுகிறார்கள் என்றால், அது காவல்துறைக்கே தெரியாமல் நடக்கிறது என்பதை எப்படி நம்ப முடியும்? என வினவியுள்ளார்.
காவல்துறை நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறதா அல்லது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று தடுக்கப்படுகிறதா? என்றும் கள்ளச்சாராய விற்பனையில் கிடைக்கும் பணத்தில் யார் யாருக்கெல்லாம் பங்கு செல்கிறது? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகள் ஆவதாகவும், இனியும் இல்லாத காரணங்களின் பின்னால் முதலமைச்சர் ஸ்டாலின் வழக்கம்போல ஒளிந்து கொள்ளாமல், தைரியமாக வந்து விளக்கமளிக்க வேண்டும் என அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.