சீமான் வீட்டின் பாதுகாவலர், உதவியாளரை சட்டவிரோதமாக காவல்துறையினர் அழைத்து செல்லப்பட்ட விவகாரத்தை அவசர வழக்காக விசாரிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சீமான் வீட்டின் பாதுகாவலர், உதவியாளரை சட்டவிரோதமாக காவல்துறையினர் அழைத்து சென்றது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் நாதக சார்பில் அவசர முறையீடு செய்யப்பட்டது.
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என்.செந்தில்குமார் அமர்வில் நாதக வழக்கறிஞர் விஜயகுமார் என்பவர் அவசர முறையீடு செய்தார். அதில், சீமான் வீட்டில் சம்மன் கொடுக்க சென்ற இடத்தில் காவல்துறையினர் அத்துமீறி நடந்து கொண்டதாக தெரிவித்தார்.
சட்ட விரோதமாக 2 பேரை அழைத்துச் சென்றுள்ளதால் இதுகுறித்து ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்ய இருப்பதாகவும், ஆட்கொணர்வு மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
முறையீட்டை கேட்ட நீதிபதிகள், காவல்துறையினரால் கைது செய்யப்பட்டவர்கள் 24 மணி நேரத்தில் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் ஆஜர் செய்வார்கள் என்றும், அதன்பின் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தை அணுக வேண்டும் எனவும் அறிவுறுத்தினர்.
மேலும், இந்த விவகாரத்தை அவசர வழக்காக விசாரிக்க முடியாது என நீதிபதிகள் மறுப்பு தெரிவித்தனர்.