எதிர்காலத்தில் தனியார் ஆராய்ச்சி நிறுவனங்களும், பல்கலைக் கழகங்களும் பல்வேறு விண்வெளி ஆய்வுகளை நடத்தி, நிலவு உள்ளிட்ட கிரகங்களுக்கு ராக்கெட்டுகளை அனுப்புவார்கள் என இஸ்ரோ துணை இயக்குநர் கிரீஷ் தெரிவித்துள்ளார்.
நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள வானவியல் ஆராய்ச்சி மையத்தில் தேசிய அறிவியல் தினத்தையொட்டி சிறப்பு அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இஸ்ரோ துணை இயக்குநர் கிரீஷ், குத்துவிளக்கேற்றி அறிவியல் கண்காட்சியை துவக்கி வைத்து மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடினார்.
பின்னர் வாழ்வியல் ஆராய்ச்சி மையத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களால் வைக்கப்பட்ட பல ஆராய்ச்சி தொடர்பான கருவிகளையும் அவர் பார்வையிட்டார்.
நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த இஸ்ரோ துணை இயக்குநர் கிரீஷ், இளைய தலைமுறையின் ஒத்துழைப்பு இருந்தால் வருங்காலத்தில் இஸ்ரோ மேன்மேலும் உயரும் எனத் தெரிவித்தார்.